பதிவு செய்த நாள்
30
ஆக
2016
12:08
மதுரை: சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களான விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்,” என, கலெக்டர் வீரராகவ ராவ் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: சமீபகாலமாக ரசாயன வர்ணப் பூச்சுக்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை சிலர் வழிபட்ட பின், அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் மாசுபடுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களாலான சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். சிலைகளை பாதுகாப்பாக நீர்நிலைகளில் கரைக்க முடியும். விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும், என்றார்.
சிலைகளை கரைக்க வேண்டிய நீர்நிலைகள்:
*மதுரை வைகை வடகரை, கீழத்தோப்பு, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய்.
*குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோயில் ஊருணி, பெரியாறு கால்வாய். உசிலம்பட்டியில் நீர் அதிகமுள்ள கிணறுகள்.
*திருமங்கலம் பகுதியில் குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி.
*பேரையூர் பகுதியில் மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊருணி, எழுமலை கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன் குறிச்சி கண்மாய். மேலுார் பகுதியில் மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி சிவன் கோயில் தெப்பம்.