ஆர்.கே.பேட்டை: கரிம்பேடு கரிய மாணிக்கசுவாமி கோவில் சீரமைப்பு பணிகள், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, நாதாதீஸ்வரர் கோவில், கரிம்பேடு கிராமத்தில் உள்ளது. வற்றாத திருக்குளத்துடன் அமைந்து உள்ள இந்த கோவிலில், ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடக்கின்றன. இது, திருமண தலமாகவும் விளங்குகிறது. இந்த கிராமத்தின் மைய பகுதியில் கரிய மாணிக்கசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலும், திருத்தணி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த, 1986ல், இந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தற்போது, இந்த கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளில், தரைத்தளம், சுற்றுச்சுவர் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.