பதிவு செய்த நாள்
31
ஆக
2016
12:08
பழநி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவசேனா சார்பில் 50க்கு மேற்பட்ட சிலைகள் விழுப்புரத்திலிருந்து பழநிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. செப்.,5ல் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா சார்பில் பழநி, கொழுமம், ஆயக்குடி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்காக விழுப்புரத்தில் இருந்து பழநிக்கு விநாயகர் சிலையின் பாகங்கள் தனித்தனியாக கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இச்சிலைகளின் உடல் உறுப்புகள் இணைக்கப்பட்டு வண்ணம்பூசும் பணி நடந்தது. இவ்வாண்டு ரூ.2ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 3 முதல் 12 அடி வரையான சிங்கம், ஆஞ்சநேயர், நாகம், மயில், மான், மூஞ்சூறு, டிரம்ஸ்செட் உள்ளிட்டவற்றில் விநாயகர் அமர்ந்துள்ள சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவசேனா மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் கூறுகையில்,“விழுப்புரம் அரனுாரில் பேப்பர் கூழ், கிழங்கு மாவில் தயாரிக்கப்பட்ட சிலைகளை வாங்கிவந்து வண்ணம் பூசியுள்ளோம். இவ்வாண்டு போர்க்கள விநாயகர், உடுக்கை விநாயகர், பாகுபலி விநாயகர் சிலைகள் புதிதாக வந்துள்ளன. இவற்றை சதுர்த்தி நாளில் பழநிநகர், ஒன்றிய பகுதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து செப்.,9ல் பழநி பாதவிநாயகர்கோயிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்வோம். பின், சண்முகநதியில் சிலைகளை கரைக்க உள்ளோம்,” என்றார்.