பதிவு செய்த நாள்
31
ஆக
2016
12:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இஸ்லாமியர் தொழுகை நேரத்தில், விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என, கலெக்டர் கதிரவன் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் படி, களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எந்த ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே, பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, மதம் தொடர்பான கோஷங்கள் எழுப்ப கூடாது. எந்த தனி நபரையும், மதத்தையும் புண்படுத்தும் வகையில் பதாகைகளை எடுத்த செல்ல கூடாது. மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் பங்கேற்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலங்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் செல்ல அனுமதி இல்லை. மேலும் இஸ்லாமியர் தொழுகை நேரமான, மதியம், 12.30 மணி முதல், 2.30 மணி வரை, விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. பிற மத வழிபாட்டு தலங்கள் வழியாக செல்லும் போது, அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, எஸ்.பி., மகேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, ஏ.டி.எஸ்.பி., வீரராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.