பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
ராஜகுளம்: காஞ்சி வரதராஜப்பெருமாள் எழுந்தருளும் மாசி திருநாளை கொண்டாடிய பக்தர்கள், அவர் மீது வைத்திருந்த பக்தியோடு அந்த ஊருக்கு ராஜகுளம் என, சிறப்பு பெயரிட்டனர். அந்த பெயர் இன்றும் சிறப்புடையதாக திகழ்கிறது.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இலுப்பப்பட்டு கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியில் சிட்டியம்பாக்கம், பழைய இலுப்பப்பட்டு, புதிய இலுப்பப்பட்டு, மம்மந்தாங்கல் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குளத்தில், ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி நாளில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் தெப்போற்சவத்தில் எழுந்தருளுவது வழக்கம். அவர் எழுந்தருளும் நினைவாக அந்த கிராமத்திற்கு, ராஜ குளம் என, பெயரிட்டுள்ளனர். இன்றும் அதே பெயர் சிறப்புடன் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லவப் பேரரசர்களின் ஆட்சி காலத்தில், கடம்பூர் மாளிகை என, அழைக்கப்படும் இன்றைய கடம்பத்துார் செல்வதற்கு, வண்டிப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு வழிப்போக்கர்கள் தங்கி செல்வதற்கு இரண்டு மண்டபம், ஒரு குளம் வெட்டியதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த சிட்டியம்பாக்கம் கிராமவாசிகள், காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது கொண்ட பக்தியால், மாசி மாதம் தெப்போற்சவம் நடத்தி உள்ளனர். அவர் நினைவாக அந்த குளத்திற்கு, ராஜகுளம் என, பெயரிட்டனர். அதுவே, ஒரு கிராமத்திற்கு பெயராக விளங்கி உள்ளது.