பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
ஆர்.கே.பேட்டை: சதுர்த்தி திதியில் விநாயக பெருமான், வீட்டு பூஜையறைகளுக்கு வருகை தர உள்ளார். அதற்கேற்ப, முன்கூட்டியே சிலைகளை தயாரிக்கும் பணியில், கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆவணி சதுர்த்தி திதி, விநாயக பெருமான் அவதரித்த திருநாள். வரும் திங்கட்கிழமை சதுர்த்தி திதியில், விநாயகர் சிலைகளை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட, பகுதிவாசிகள் தயாராகி வருகின்றனர். தற்போது, காகித கூழ் மற்றும் கிழங்கு மாவு கொண்டு, பிரம்மாண்ட சிலைகள் தயாரிக்கப்பட்டாலும், பாரம்பரியமாக களிமண் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளுக்கும், நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சதுர்த்தி நாளில், களிமண்ணை சந்தைக்கு கொண்டு வந்து, சிலைகளை வடித்து, உடனடியாக விற்பனை செய்வது வழக்கம். ஆனால், தேவையை ஈடுசெய்ய அது போதுமானதாக இல்லை. இதனால், முன்கூட்டியே, களிமண் விநாயகர் சிலைகளை உருவாக்கும் பணியில், மண்பாண்ட கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளிப்பட்டு அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள மண்பாண்ட கலைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிலைகள் தயாரிக்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மண்பாண்டங்கள் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. திருமண விசேஷங்களுக்கு சாலி கரகம் மற்றும் விநாயகர் சிலைகள் தயாரிப்பது மட்டுமே, தற்போது செய்து வருகிறோம். இந்த சிலைகள் வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் வண்ணம் பூசப்படும். ஒரு சிலையின் விலை, 40 ரூபாய் என, விற்பனை செய்யப்பட உள்ளது. -கே.பாண்டுரங்கன், மண்பாண்ட கலைஞர்