பதிவு செய்த நாள்
07
செப்
2016
11:09
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை நகரில் இந்தாண்டு, 2,500 இடங்களில், விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதில் பெரும்பாலான இடங்களில் நேற்று, சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடை வீதிகளில் விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல், குடை, மா இலை, பூ, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை அமோகமாக நடந்தது. அரை அடி முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்து அமைப்பினரும், பொதுநல சங்கத்தினரும் காலையிலேயே விநாயகர் சிலைகளை நிறுவி, சுற்றி பந்தல் அமைத்தனர். பின், சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் விநாயகரின் பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. இதனால் நேற்று, சென்னை நகரில் திரும்பிய திசையெல்லாம் விழாக் கோலமாகவே காட்சி அளித்தது. இந்த சிலைகள் அனைத்தும் பூஜை முடிந்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. வரும், 10, 11ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதில், 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.