பதிவு செய்த நாள்
07
செப்
2016
12:09
உடுமலை: உடுமலை, ஜி.டி.வி., லே-அவுட்டில், விநாயகருக்கு பல வகை மலர்கள் மற்றும் இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஜி.டி.வி., லே-அவுட்டில், அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு, காலையில் மஹாசங்கல்பம், வேதாபாராயணம் மற்றும் சிறப்பு அபிேஷக, அர்ச்சனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, நொச்சி, மரிக்கொழுந்து, அரளி, வெள்ளெருக்கு உட்பட 21 வகையான இலைகள் மற்றும் புன்னை, எருக்கு, மந்தாரை, மகிழம், தும்பை, செண்பகம், முல்லை, கொன்றை, செவ்வந்தி, செங்கழுநீர், பில்வம், பவழமல்லி உட்பட, 21 வகையான மலர்கள் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது. *உடுமலை முனீர் நகரில், அப்பகுதி மக்களால் சிவன், பார்வதியுடன் இணைந்து இருக்கும் வகையில், 15 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கபட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பெரியார் நகரில், இந்து முன்னணி சார்பில், 5 அடி உயரத்தில் சிங்க வாகனத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நகரில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சிலைகள் இன்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.