பதிவு செய்த நாள்
28
செப்
2011
12:09
அப்பா, நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? நன்றாக நடந்து கொண்டிருக்கும் வியாபாரத்தை ஏன் நிறுத்துகிறீர்கள். இவ்வுலகம் பொருள் என்ற அச்சாணியில் சுற்றுவதை நீங்கள் அறியவில்லையா? எங்களையாவது வியாபாரம் செய்ய விடுங்கள், என தங்கள் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர் அவரது ஆறுமகன்கள். தந்தை ஜெயவந்த் அவர்களிடம், மக்களே! நீங்கள் இவ்வூரில் நல்லபெயர் வாங்கவில்லை. நம்மை விட வளர்ந்தவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறீர்கள். நான் விஷ்ணு பக்தன் என்பதை ஊரறியும். நீங்களோ கடவுளுக்கு பயப்படாமல், இருக்கிற பொருட்களை யெல்லாம் தவறான வழியில் செலவழிக்கிறீர்கள். உங்களிடம் இல்லாத கெட்ட குணமே இல்லை. நான் இன்னும் சம்பாதித்தால், பணம் உங்களை அடிமைப்படுத்தி விடும். நம்மிடம் இப்போது இருப்பதே காலம் முழுமைக்கும் போதும். சம்பாதித்த பணத்தில் பாதியை தர்மத்திற்கு ஒதுக்கி விடுவோம். மற்றதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், என்றார். மகன்கள் ஆறு பேருக்கும் கடும் கோபம். அவர்கள் தந்தையைத் திட்டி தீர்த்தனர். இவர்களில் மூத்தவன் தன் தம்பிகளிடம், அடேய்! இவரிடம் பணம் இருந்தால், நமக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார். தானம், தர்மம், கோயில், குளம் என பாழாக்கி விடுவார். நாம் அரசனிடம் செல்வோம். இவரைப் பற்றி புகார் செய்து, செல்வத்தை தக்க வைத்துக் கொள்வோம், என்றான். அனைவரும் அரசவைக்கு சென்றனர்.
மூத்தவன் அரசனிடம், அரசே! எங்கள் தந்தையார் எங்கள் தாத்தா சொத்துக்களை வைத்துக் கொண்டு, எங்களிடம் தர மறுக்கிறார். சொந்தமாக செய்த வியாபாரத்தையும் நிறுத்தி விட்டார். அதில் சேர்த்த செல்வத்தை தான தர்மம் செய்கிறார். எங்களுக்கு எதுவும் தரவில்லை. நாங்கள் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்றால் முதல் போடுவதற்கு பணம் தர மறுக்கிறார். நாங்கள் எப்படி வாழ முடியும்? எங்களுக்கு சொத்தை வாங்கித் தாருங்கள், என்றான். அரசன் யோசித்தான். அவர்களை அனுப்பிவிட்டு, ஜெயவந்த்தை அழைத்து வர உத்தரவிட்டான். ஜெயவந்த் கம்பீரத்தோற்றத்துடன் அரசவைக்குள் வந்தார். நெற்றியில் நாமம் பளிச்சென மின்னியது. பண்புடன் அரசருக்கு வணக்கம் தெரிவித்தார். அரசன் அவரிடம், நீர் உமது மகன்களுக்கு பொருளைக் கொடுக்காமல், உம்மிடமே வைத்துக் கொண்டிருக்கிறீராமே, அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றான் கடுமையாக. மன்னா! பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். இறக்கும் போது என்ன கொண்டு செல்லப்போகிறோம் எதுவும் இல்லை. நாம் செய்யும் நல்ல செயல்களும், தீய செயல்களும்தான் நம்முடன் வரப்போகின்றன. இறைவன் கொடுத்த செல்வத்தில், ஏழை, எளியோருக்கு சிறிது கொடுப்பதில் என்ன தவறு? தானம் தர்மம் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது. நினைத்தவுடனேயே செய்துவிட வேண்டும். இது புண்ணியத்தைச் சேர்க்கும், என்றார்.
அரசன் மேலும் மேலும் கேள்விகள் கேட்க, ஜெயவந்த் தர்க்க ரீதியாக பதிலளித்தார். அவற்றைப் புரிந்து கொள்ள முடியாத மன்னன், இந்த மனிதர் சரியான பைத்தியமாக இருக்க வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து, இப்படிப்பட்டவரை ஊருக்குள் நடமாடவிட்டால் ஏதேனும் அபாயம் நேரும், எனவே அவரை சிறையில் அடைப்பதே சரி என எண்ணினான். சற்று நேரத்தில் மனம் மாறிய அவன் இவருக்கு சிறைதண்டனை கொடுத்தால் சிறைத்துறைக்கு வீண் செலவு தான் ஏற்படும், ஒரு பைத்தியத்தை சிறையில் அடைப்பதை விட, கொன்று விடுவதே மேல் என கணக்குப் போட்டான். காவலர்களே! இவரை நீங்கள் நாளை ஒரு சாக்கில் கட்டி குளத்தில் எறிந்து விடுங்கள், என்றான். ஜெயவந்த் இழுத்துச் செல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பெருமாளே! நான் உனது பக்தன். எனக்கு நீ இப்படிப்பட்ட சோதனையை தந்திருக்கிறாய். இதை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தானம், தர்மம் செய்வதைப் பாவம் என நீ கருதினால், இந்த தண்டனையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் யாருக்கும் இதுவரை எந்த கெடுதலும் செய்ததில்லை. அந்த திருப்தியுடன் விரைவில் உனது பாதத்தை அடைவதில் பெருமைப்படுகிறேன், என்றவராய், இரவு முழுவதும் கைகொட்டி பஜனை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காவலர்கள் அவரை ஒரு சாக்கில் கட்டி குளத்திற்கு தூக்கிச் சென்றனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. மக்கள் ஒன்றுகூடி குளக்கரையில் நின்றனர்.
ஏழை எளியோர்களுக்கு உதவிய இந்த பெரியவருக்கு இப்படி ஒரு தண்டனையா? இந்த மன்னனுக்கு கேடுகாலம் துவங்கிவிட்டது. அதனால்தான் இப்படியொரு தண்டனையை விதித்திருக்கிறான், என்று பேசிக் கொண்டனர். ஆனாலும், மன்னனை எதிர்க்க யாருக்கு துணிவு வரும்? சாக்கிற்குள் இருந்த ஜெயவந்த், இறைவா, எனக்கு இனி பிறவி வேண்டாம். ஒருவேளை பிறக்க வைப்பதே சித்தமானால், உன்னை மறவாதிருக்கும் இதயத்தை தா எனக் பிரார்த்தித்தார். காவலர்கள் மூடையை குளத்திற்குள் வீசினர். தென்நாட்டில் அப்பர் பெருமானைக் கல்லில் கட்டி கடலில் தள்ளியபோது, கல்லோடு சேர்ந்து அப்பர் மிதந்தார். அதுபோன்ற அதிசயம் இந்த குளத்திலும் நடந்தது. ஜெயவந்த் இருந்த மூடை மூழ்குவதும், வெளியே தெரிவதுமாக இருந்தது. சற்றுநேரத்தில் அங்குள்ளோர் கண்கள் கூசின. பளபளக்கும் பொன்னிறமுள்ள ஆமை ஒன்று மூடையை தன் முதுகில் சுமந்து வந்தது. அது மெல்ல மெல்ல ஊர்ந்து குளக்கரையை அடைந்து மூடையுடன் நின்றது. மன்னனுக்கு தகவல் பறந்தது. அவன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். மூடை அவிழ்க்கப்பட்டது. மூடைக்குள் ஜெயவந்த் பத்மாசனத்தில் இருகரம் கூப்பி அமர்ந்திருந்தார். மன்னனும் சுற்றி நின்ற மக்களும் அவரது கால்களில் விழுந்தனர். பெருமாளே கூர்ம வடிவில் வந்து அவரை காத்துள்ள விஷயம் அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது. மகான் ஜெயவந்த் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்நேரத்தில் கரையில் நின்ற ஆமை தண்ணீருக்குள் சென்று மறைந்துவிட்டது. அதன்பிறகு ஜெயவந்தை, தனது குருவாக மன்னன் ஏற்றுக் கொண்டான். நாடு முழுவதும் பக்தியில் சிறந்து விளங்கியது.