பதிவு செய்த நாள்
08
செப்
2016
11:09
சென்னை: பெசன்ட்நகர், வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெரு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. பெசன்ட்நகர், வேளாகங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நளான நேற்று, தாய்மையில் மேன்மை பெறும் இரக்கம் எனும் தலைப்பில் விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை முதல் தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடந்தன. அன்னை தெரசாவுக்கு கடந்த, 4ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில், பெசன்ட்நகர், ஆலயத்தின் கொடிமரம் முன் அன்னை தெரசாவின் உருவச்சிலை நிறுவப்பட்டது. சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அன்னை தெரசா திருவுருவ சிலையை திறந்து வைத்து, சிறப்பு திருப்பலி நிகழ்த்தியதாவது: மரியா நம் அனைவருக்கும் தாயாக இருக்கிறார். நானே எனக்கு கடவுள் என மனிதன் சில நேரங்களில் முடிவு செய்வதால் விபரீதம் நிகழ்கிறது. இறைவனால் கொடுக்கப்பட்டது உயிர். ஆனால், கருணைக் கொலையை மனிதன் கையில் எடுத்துக் கொள்கிறான். இது தவறான செயல். எனவே, ஆண்டவன் காட்டிய வழியில் நடப்போம். அனைத்து தாய்மார்களும், மரியால் காட்டிய வழியில் சென்றால் தாய்மை மேன்மை பெறும். இவ்வாறு அவர் திருப்பலி நிகழ்த்தினார். இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், குழந்தை இயேசுவுடன் அன்னை மரியால் எழுந்தருளினார். பல்லாயிக்கணக்கான பக்தர்களின் வாழ்க கோஷத்துடன் வீதிகளை பவனி வந்து தேர் இரவு ஆலயம் திரும்பியது. விழாவின் இறுதி நாளான இன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.