பதிவு செய்த நாள்
08
செப்
2016
12:09
தமிழகத்தில், 100 கோடி ரூபாய் செலவில், கடலோர சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்வதேஷ் தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், பல்வேறு சுற்றுலா திட்டங்களை, மத்திய சுற்றுலா அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ், அது தொடர்புடைய சுற்றுலா தலங்கள் இணைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படுகின்றன. அவ்வாறு, 13 தலைப்புகளில் சுற்றுலா இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில், கடலோர சுற்றுலா என்ற பெயரில், தமிழகத்தில், 100 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில், சுற்றுலா திட்டப் பணிகளுக்காக, 450 கோடி ரூபாய், சமீபத்தில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழகத்தில், சென்னை - மாமல்லபுரம் - ராமேஸ்வரம் - மணப்பாடு - கன்னியாகுமரி ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த கடலோர சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒளி - ஒலி காட்சிகள், கடற்கரைகளில் கூடுதல் வசதிகள், விவேகானந்தர் நினைவிடம் - திருவள்ளுவர் சிலை இடையே நடைபாதை உள்ளிட்ட, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ம.பி., மற்றும் உத்தரகண்டில், பாரம்பரிய சுற்றுலா; உ.பி.,யில், ராமாயண சுற்றுலா; சிக்கிமில், வடகிழக்கு சுற்றுலா ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. - நமது சிறப்பு நிருபர் -