பதிவு செய்த நாள்
13
செப்
2016
11:09
துவரிமான்: மதுரை பரவை முத்துநாயகியம்மன் கோயில் திருவிழாவிற்காக துவரிமான் சாலைக்கரை முத்தையா சுவாமி கோயிலில் நேர்த்திக்கடன் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் பூஜாரிகள் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். முத்துநாயகியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் காப்பு கட்டுடன் விழா துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும். விழா நடக்கும் ஒவ்வொரு நாளும் விழாக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாட்டு கச்சேரி என சிறப்பு ஏற்பாடுகளை செய்வர். பரவை, சமயநல்லுார், ஊர்மெச்சிகுளம், தேனுார், துவரிமான், அதலை, பொதும்பு உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இருந்து கிராம மக்கள் விழாவில் பெரும் திரளாக கலந்து கொள்வர். நேர்த்திக்கடன் செலுத்துவோர் ஏராளம்.
பாரம்பரிய முறைகள்: நேர்த்திக்கடன் செலுத்துவோர் பரவை அய்யனார் கோயில் பூஜாரி முத்துமாரி மூலம் பெயர்களை பதிவு செய்வர். உதாரணமாக குழந்தை வரம் பெற்றவர் மதனம்பிள்ளை எனும் பொம்மையை முத்துநாயகியம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவார். இதுபோல் வகை வகையாக நேர்த்திக்கடன் செலுத்துவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நேர்த்திக்கடனுக்கு ஏற்ப சுடு மண் பொம்மைகள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே பூஜாரியிடம் தெரிவிக்க வேண்டும். பூஜாரி தலைமையில் வேளார் சமுதாயத்தினர் மட்டுமே நேர்த்திக்கடன் பொம்மைகளை துவரிமான் சாலைக்கரை முத்தையா சுவாமி கோயில் வளாகத்தில் தயாரிப்பர். பூஜாரி முத்துமாரி கூறியதாவது: அக்னிசட்டி, மதனம்பிள்ளை, குதிரை என பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சுடு மண் பொம்மைகள் தயாரித்து, அழகாக வர்ணம் தீட்டி வருகிறோம். இதை பல தலைமுறைகளாக செய்து வருகிறோம். தெய்வத்துக்கு செய்யும் தொண்டாகவே இதை கருதுகிறோம், என்றார்.