பதிவு செய்த நாள்
13
செப்
2016
11:09
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுாரில், சமூக விரோதிகளின் கூடாரமாக கிடந்த, திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலின், 56 ஏக்கர் இடம், குத்தகை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், இந்த இடத்தில், சவுக்கு பயிரிடவுள்ளதால், கோவிலுக்கு போதிய வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், திருவிடந்தையில் உள்ளது, நித்யகல்யாண பெருமாள் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில், சொத்துகள் உள்ளன.
பயன்பாடற்ற நிலம்: இதில், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள இள்ளலுார் ஊராட்சியில், பிரதான சாலையின் இரு புறமும், கோவிலுக்கு சொந்தமாக, 56 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்த கோவில் நிலம், பயன்பாடின்றி கிடந்தது. இதை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர், அத்துமீறி உள்ளே நுழைந்து, அநாகரிக செயலில் ஈடுபட்டு வந்தனர். அநாகரிக செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், ஆக்கிரமிப்பு ஏதேனும் வந்து விடக்கூடாது என்ற காரணத்தினாலும், இந்த காலியிடத்தை, பயனுள்ள வகையில் மாற்ற, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
15 ஆண்டுகள்: அதன்படி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு, இந்த நிலத்தை குத்தகைக்கு விட, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. 2016 முதல் 2031 வரையிலான, 15 ஆண்டுகள், இந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த காலியிடத்தில், குத்தகை எடுத்த நிறுவனம், சவுக்கு பயிரிடுவதற்கான அடிப்படை பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. சவுக்கு சாகுபடியில் கிடைக்கும் வருவாயில், 30 சதவீதம் கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தப்படும் எனவும் தெரிகிறது. தற்போது, குத்தகைப்பெற்ற நிறுவனத்தை சார்ந்தோர், நிலத்தை சமன்படுத்தி சவுக்கு கன்றுகள் நடுவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திருப்போரூர் சுற்றியுள்ள பகுதிகளில், பட்டா நிலங்களே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அபகரிக்கப்படும் நிலையில், கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான இந்த இடம், நீண்ட ஆண்டுகளாகவே காலியாகவே இருப்பதால், எளிதாக ஆக்கிரமிப்பு செய்து விட முடியும். இதுபோன்ற பிரச்னை காரணமாக குத்தகை விட்டு, பாதுகாப்பாக இருக்கவும், கோவிலுக்கு சற்று வருவாய் கிடைக்கவும் முடிவு செய்தோம். அதனாலேயே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு குத்தகை விட்டுள்ளோம். அந்நிறுவனம், சவுக்கு பயிரிட முடிவு செய்துள்ளது. காகித உற்பத்திக்கு சவுக்கு பட்டைகள் தேவை என்பதால், அவர்கள் சவுக்கு பயிரிடவுள்ளனர்.
இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி நிலத்தை பாதுகாக்க முடிவு திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதில், பல ஏக்கர் நிலங்கள் தரிசாகவே உள்ளன. இவ்வாறு உள்ள நிலங்களை, வருவாய் குறைந்த கோவில் களின் மேம்பாட்டிற்கு, குத்தகை விட்டால், வருவாயும் கிடைக்கும். அதன் மூலம், அந்த நிலத்தை பாதுகாக்கவும் முடியும் என, திருப்போரூர் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.