பதிவு செய்த நாள்
13
செப்
2016
05:09
மதுரை: பக்ரீத் திருநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 8.30, மணிக்கு மசூதியிலிருந்து முத்தவல்லி ஹாஜிபாஷா தலைமையில் ஜமாத்தினர் ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு தக்பீர் முழக்கத்துடன் சென்றனர். ஈத்கா மைதானத்தில் ஈதுல் சுஹா எனும் இரண்டு ரகாத் வாஜிபான சிறப்பு தொழுகை கூடுதலான ஆறு தக்பீருடன் நடந்தது. ஹஸரத் முஸ்தகீம் குத்பா பேரூரையை நிகழ்த்தி, உலக அமைதி மற்றும் நன்மைக்காக துவா செய்தார். பின்னர் ஜமாத்தினர் ஒருவொருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, அவலுார்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் எதப்பட்டு, மேல்மலையனுார், வளத்தி, நீலாம்பூண்டி, சங்கிலிகுப்பம், செவலபுரை, ஆனந்தல், எரும்பூண்டி, மேலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லா கான் மசூதியில் முஸ்லீம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி பெரிய பள்ளி வாசல், சின்ன பள்ளி வாசல், எம்.ஜி.ஆர்., நகர், என்.ஆர்.பேட்டை, பஸ்டாண்டு பள்ளி வாசல் ஜமாத்தினர் காலை 8 மணிக்கு பீரங்கி மேடு பெரிய பள்ளி வாசலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். கூட்ரோட்டில் ஜாமாத் தலைவர் மஜீத்பாபு பிறை கோடியேற்றினார். திருவண்ணாமலை ரோடு வழியாக செஞ்சி கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியை அடைந்தனர்.அங்கு காலை 9 மணிக்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தது. ஷமீம் அக்தர் தொழுகையை நடத்தினர். இதில் டாக்டர் சையத் சத்தார், அப்துல் சலாம், சையத் பாபு, சையத் கலீல், அஷ்ரப் அலி, பள்ளி வாசல் தலைவர்கள் அலிம் குரோஷி, முனீர் பாஷா, அன்சர், முன்னாள் கவுன்சிலர்கள் சையத்பாபு, ஜான்பாஷா, முர்த்துஜா, காஜாபாஷா, சையத் சர்தார் மற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சின்னதெரு பள்ளிவாசலில் கூடினர்.அங்கிருந்து நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலை அடைந்தனர்.அங்கு நடந்த சிறப்பு தொழுயில் கலந்து கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.முன்பாக ஏழைகளுக்கு குர்பானி என்னும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வழங்கினர்.