பதிவு செய்த நாள்
14
செப்
2016
10:09
மேலுார் : மேலுார் அருகே வெள்ளலுார் ஏழைகாத்தம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனாக வழிபட ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறுமிகள் கோயில் வீட்டில் 15 நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். மழை பொழிந்து பூமி செழிக்க, இன்னுயிர்கள் சுபிட்சம் பெற இக்கோயில் விழா பாரம்பரியமாக நடக்கிறது.
வெள்ளலுார் நாடு 60 கிராமங்களை உள்ளடக்கியது. இக்கிராமத்தவர் பாரம்பரியமாக வழிபடும் ஏழைகாத்தம்மன் கோயில் புரட்டாசி திருவிழா பிரசித்தி பெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், அனைத்து உயிர்களும் நோய், நொடியின்றி வாழவும் நடத்தப்படும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 7 சிறுமிகளை அம்மனாக தேர்வு செய்து மக்கள் வழிபடுவர். இதற்கான தேர்வு நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அழகர்கோவில் நுாபுர கங்கையில் சிறுமிகள் புனித நீராடினர். பின் தங்க நகைகள் அணிந்து, பட்டுடுத்தி நேற்று காலை கோயில் வீடு மந்தையில் உற்றார், உறவினர்களுடன் ஒன்று கூடினர்.
அம்மனாக சிறுமிகள்: பட்டு தலைப்பாகை அணிந்து, வெள்ளி பூண் செங்கோலுடன் பூஜாரி சின்னதம்பி புனித கலசத்துடன் சாமியாடிபடி, நேற்று காலை 8:45 மணிக்கு கோயில் வந்தார். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் கோயில் வீடு மந்தையில் கூடியிருந்த கிராமத்தினர் முன் அம்மனாக வழிபட சிறுமிகள் தேர்வு துவங்கியது. கரை எனும் வம்சாவழியினர் பட்டியலுடன் பூஜாரி, முதலாவதாக வெள்ளலுார் சாவடதாங்கி கரையை சேர்ந்த சிறுமிகளில் ஒருவரை தேர்வு செய்தார். அடுத்தடுத்து புளிமலைபட்டி வெக்காலி கரை, கொட்டானிபட்டி சலிபுலி கரை, உறங்கான்பட்டி திருமான் கரை, முத்தம்பட்டி செம்புலி கரை, குறிச்சிப்பட்டி நண்டன் கோப்பன் கரை, பெரிய ஒக்கப்பட்டி பூலான் மலவராயன் கரை என ஏழு சிறுமிகளை தேர்வு செய்து கோயில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
15 நாட்கள் விரதம்: இச்சிறுமிகள் 15 நாட்கள் கோயிலுக்குள் தங்கி 60 கிராமங்களை வலம் வந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைத்து சாப்பிடுவர். இந்நாட்களில் கிராம மக்கள் எண்ணெய் தாளிதம், மாமிசம், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடும் விரதம் இருப்பர். இதைதொடர்ந்து செப்., 20ல் முளைப்பிடுங்கி ஆடுதல் நிகழ்ச்சியும் (பானையில் இருக்கும் நெல் எடுப்பது), செப்.,27ல் கோயில் வீட்டில் இருந்து சிறுமிகள் முன்னே செல்ல அம்பலக்காரர்கள் தலைமையில் 8 கி.மீ., துாரத்தில் கோயில்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வர்.
வானம் பொழியும்: பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரிசுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதைதொடர்ந்து செப்.,28ல் தேரோட்டம், செப்.,29ல் மஞ்சள் நீராட்டு, அக்.,4ல் பெரிய மது குலைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.