ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கர்நாடக பக்தர்களுக்கு, இந்து மக்கள் கட்சியினர் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.செப்., 12ல் ராமேஸ்வரத்தில் கர்நாடக பக்தர்களை, தமிழ் அமைப்பினர் தாக்கினர். ராமேஸ்வரத்திற்கு வரும் கர்நாடக பக்தர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, நேற்று ராமநாதபுரம் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கர்நாடக பக்தர்களை, பூரண கும்பமரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர். அவர்களை கோயிலுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த கர்நாடக பக்தர்கள் நன்றி தெரிவித்து திரும்பினர். பிரபாகரன் கூறுகையில், “தமிழர்களை தாக்கும் கன்னட வெறியர்கள், தமிழகத்தில் கோயிலுக்கு வரும் கர்நாடக பக்தர்களை தாக்கும் தமிழ் அமைப்பினரை கண்டிக்கிறோம். கர்நாடக பக்தரிடம் அச்சத்தை போக்கும் விதமாக ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த அவர்களை வரவேற்று பாதுகாப்புடன் தரிசனம் செய்ய வைத்து அனுப்பினோம்,” என்றார்.