பதிவு செய்த நாள்
14
செப்
2016
11:09
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும், ஆவணி மாதம் ஒன்பது நாட்கள் நடைபெறும், பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. இந்த உற்சவ நாட்களில், மூலவர் மற்றும் உற்சவருக்கு நுாலிழைகளால் அலங்காரம் செய்யப்படும். இது தவிர, அலங்கரிக்கப்பட்ட உற்சவ நம்பெருமாள், கோவில் கொடி மரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, யாகசாலைக்கு வந்தார். அங்கு, சிறப்பு திருவாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.இன்று பிற்பகலில், மூலவர் பெரிய பெருமாளுக்கு பூச்சாண்டி சேவை நடக்கிறது. இந்நிகழ்ச்சி யில், மூலவர் மற்றும் உற்சவர், உபய நாச்சியார்களுக்கு நுாலிழைகளால் செய்யப்படும் அலங்காரம் காண்போருக்கு அச்சம் ஏற்படுத்துவது போல் இருக்கும் என்பதால், இதை பூச்சாண்டி சேவை என்றும் கூறுவர். இரவு, 8:00 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பவித்ர உற்சவ மண்டபத்துக்கு வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.