பதிவு செய்த நாள்
14
செப்
2016
11:09
முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் காலமான மஹாளய திதி, வரும் 17ம் தேதி துவங்குகிறது. நம் வாழ்க்கையின் உயர்விற்கு உதவி செய்த பெற்றோர், மூதாதையர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான அரிய காலமே மகாலய பக் ஷம் எனப்படுகிறது. பக் ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்துபோன நம் முன்னோர், இந்த மஹாளய பக் ஷமான 15 நாட்களும், பூமிக்கு வந்து, நம்முடன் தங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது. எனவே, இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு, நாம் அன்னம் மட்டும் அளிக்க வேண்டும். மற்ற விசேஷமான பூஜைகள், ஹோமங்கள் செய்யக்கூடாது என்றும் சாஸ்திரம் அறிந்தோர் விளக்கம் அளிக்கின்றனர். மஹாளயத்தை பார்வணம்; ஹிரண்யம்; தர்ப்பணம் என மூன்று வகைகளில் செய்யலாம். பார்வணம் என்பது ஆறு அந்தணர்களை, பித்ருக்களாக நினைத்து உணவளிப்பது. ஹிரண்யம் என்பது, அரிசி வாழைக்காய் ஆகியவை செய்து தர்ப்பணம் செய்வது. தர்ப்பணம் என்பது, அமாவாசை தர்ப்பணம் போல செய்வதாகும். இவற்றில் ஏதேனும் ஒரு விதத்தில் பித்ருக்களுக்கு செய்து, கடமை நிறைவேற்ற வேண்டும். பணிச்சுமையால், ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்வோர், மஹாபரணியில் செய்வது சிறந்ததாகும். - நமது நிருபர் -