மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள உருளி கிராம மயிற்கண் உடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கிராமப்புறங்களில் மழை வேண்டியும்,மக்கள் நலம் பெறவும் வருடந்தோறும் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். ஒவ்வொரு கிராமத்திலும் அய்யனார் கிராமத்தை காவல் காத்து வருவதாகவும்,இரவில் அய்யனார் குதிரையில் வலம் வருவதாகவும்,வருடத்திற்கு ஒருமுறை அய்யனாருக்கு குதிரை எடுப்பு விழா நடத்தினால் மழை பெய்து விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வழிவகை செய்வார் என்பது நம்பிக்கை. மூன்று வருடங்களுக்கு பிறகு உருளி மயிற்கண்உடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. மானாமதுரை வேளார் தெருவில் புரவிகளுக்கு புதுவேட்டி,துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் புரவிகளுடன் கிராம மக்கள் ஊர்வலமாக 12 கி.மீ., நடந்து வந்து உருளி கிராமத்தை வந்தடைந்தனர்.