பதிவு செய்த நாள்
14
செப்
2016
11:09
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆதிஷேச குளம் அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் குவியும் குப்பைகளாலும், சிறுநீர் கழிப்பவர்களாலும், அதன் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குமுறுகின்றனர். சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் வெளியே ஆதிசேஷ தீர்த்தகுளம் உள்ளது. பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த குளம் அருகே, குப்பை தொட்டிகளை வைத்துள்ளது மாநகராட்சி. ஆனால், அதில் குப்பைகளை அவ்வப்போது அகற்றுவதே இல்லை.
இதில் நிரம்பி வழியும் பிளாஸ்டிக் குப்பைகள், குளத்தில் சேர்வதால், தண்ணீரும் மாசு பட்டு வருகிறது. இந்த இடம் அசுத்தமாக இருப்பதால், அருகில் கழிப்பிடம் இருந்தும், குளத்தின் சுவரில் பலரும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், சுவர்கள் முற்றிலும் பாழாகியுள்ளன. குளத்தின் அருகே சென்றாலே துர்நாற்றம் துரத்தி அடிக்கிறது. இது போதாதென்று, மாடுகளை கட்டும் தொழுவமாக, குளக்கரையை சிலர் மாற்றியுள்ளனர். பயன் படுத்தப்படாத வாகனங்கள், மாதக்கணக்கில் துருப்பிடித்து அங்கேயே கிடக்கின்றன. புனிதமான குளம் இப்படி அவலமாக மாறிப்போனதைப் பார்த்து, பக்தர்கள் பெரும் வேதனை அடைகின்றனர். கோவில் குளம் அருகே, யாரும் போகவே முடியாத அளவுக்கு, இதனை மாற்றியிருப்பதே, மாநகராட்சியின் சாதனை. முதலில், இங்குள்ள குப்பைத்தொட்டிகள் இடம் மாற்றப்பட வேண்டும்; குளத்தின் சுவர்களை நாசம் செய்பவர்களை பிடித்து, கோவில் நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். இன்றைய நிலையில், இப்படி ஒரு குளத்தை, எந்தக் கோவிலிலும் புதிதாக அமைக்க முடியாது. இருக்கின்றதைக் காப்பதற்கு, அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டு, குளத்தைக் காக்க வேண்டுமென்பதே ஆன்மிகவாதிகளின் அன்பு கோரிக்கை.