பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
புதுச்சேரி: புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளி வாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. பக்ரீத் யொட்டி, சுப்பையா சாலை அஹமதியா பள்ளிவாசல், காசிம் சாலை முவஹ்தீயா பள்ளிவாசல், மீரா பள்ளி வாசல், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், வாணரப்பேட்டை, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை, மூலக்குளம், தவளக்குப்பம், முதலியார்பேட்டை, குருமாம் பேட், காலாப்பட்டு, பெரியக்கடை பள்ளிவாசல், தட்டாஞ்சாவடி, சுல்தான்பேட்டை, ஒதியம்பட்டு உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் தொழுகை நடந்தது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில், பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. பொள்ளாச்சியில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நேற்று கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளி வாசலில், நேற்று காலை 8:45 மணிக்கு சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. ஹாஜி சிகாபூதீன் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். பெரிய பள்ளி வாசல் தலைவர் தாதாகான் நன்றி கூறினார். இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். இதுபோன்று, கோட்டூர் ரோட்டில் உள்ள பள்ளி வாசலில், பெண்களுக்காக தனியாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. சூளேஸ்வரன்பட்டி, குமரன்நகர், பல்லடம் ரோடு உள்ளிட்ட, 16 பள்ளி வாசல்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள, 46 பள்ளி வாசல்களிலும் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத்தொழுகை நேற்று நடந்தது. பின்னர், வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் பண்டிகையை கொண்டாடினர்.
திருநெல்வேலி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்பட பல்வேறு இஸ்லாம் அமைப்பினர் மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், ஏர்வாடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க.,சுன்னத் ஜமாத், மறுமலர்ச்சி த.மு.மு.க.,உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தொழுகை மேற்கொண்டனர். ஆயுதப்படை சிந்தாமதார் ஷா பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் தி.மு.க.,எம்.எல்.ஏ.,டி.பி.எம்.,மைதீன்கான் பங்கேற்றார். பேட்டை, தாழையூத்து, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. பெருநாள் தொழுகைக்குப் பின்பு குர்பானி பிராணிகளை அறுத்து அதை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்தனர்.