பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
புதுச்சேரி: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளதால், கோபுர சிற்பங்கள் சேதமடைந்துள்ளன. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரையில், பழமைவாய்ந்த, சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில், இக்கோவிலில் நடக்கும் ஜோதி தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வக்ர காளியம்மனுக்கு நடக்கும் ராகுகால பூஜையும் பிரசித்திப் பெற்றதாகும்.
இக்கோவிலில், வக்ரகாளியம்மன் சன்னிதிக்கு அருகில், ஏழு நிலை கொண்ட ராஜகோபுரமும், சந்திரமவுலீஸ்வரர் ஆலய வளாகத்தில் மூன்று நிலை கொண்ட இரண்டாவது கோபுரமும் அமைந்துள்ளன. பழமைவாய்ந்த இந்த கோவிலில் போதிய பராமரிப்பு இல்லாததால், கோபுரங்களிலும் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால், கோபுரங்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும், திருவக்கரை பகுதியை சுற்றிலும் மலைகள் அமைந்துள்ளதால், பாறைகளை உடைக்க வெடி வைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அதிர்வு காரணமாகவும், கோவில் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக, சந்திரமவுலீஸ்வரர் ஆலய மூன்றுநிலை கோபுரத்தின் அடிதளத்தில் உள்ள மெகா சைஸ் கருங்கல்லில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே, திருவக்கரை கோவிலின் ராஜகோபுரத்தை சீரமைக்கவும், கோபுரங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யவும், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவக்கரையை சேர்ந்த நடராஜன் கூறுகையில், ‘திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால், கோவிலுக்கு லட்சக்கணக்கில் வருவாய் வருகிறது. இக்கோவிலின் வருவாயை, பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தாமல், மற்ற கோவில்களுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். உடனடியாக, வக்ர காளியம்மன் கோவிலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.