பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கோவிலை திறக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நெற்குணம் காலனியில், மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவில் பிரச்னை ஏற்பட்டு, கோவில் மூடப்பட்டது.இந்தாண்டு கோவிலை திறந்து, திருவிழா நடத்துவது தொடர்பாக, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் தர ப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், கிராம பெண்கள் நேற்று மாலை கோவிலை திறக்க முடிவு செய்தனர். தகவலறிந்த தாசில்தார் பழனி, அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி தலைவர் நாராயணசாமி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் எட்டு பேரில், ஒருவரை தவிர மற்ற அனைவரும் கோவிலை திறக்க ஒப்புக் கொண்டனர்.அதனையடுத்து, இன்று ஆர்.டி.ஓ.‚ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.