பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
திருவண்ணாமலை: காவிரி பிரச்னைக்காக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், சாதுக்கள், 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் பங்கேற்றார். கூட்டு பிரார்த்தனையின் போது, நாட்டில் மொழி, மாநில, இன வேறுபாடு, இன உணர்வுகளை தூண்டும் சம்பவம், காவிரி தொடர்பான பிரச்னையில், வேற்றுமையை உருவாக்க கூடிய சக்திகளை ஒடுக்க வேண்டும். அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையை மேலோங்க செய்து, கர்நாடகாவில் நடக்கக் கூடிய பொருட் சேதங்களையும், உயிர் சேதங்களையும் தவிர்க்க, அருணாசலேஸ்வரர் அருள்பாலிக்க வேண்டும். மேலும், அங்குள்ள அரசு, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழர்கள், கன்னடர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல், அனைவரும் இந்தியர் என்ற உணர்வை மேலோங்க செய்யக்கூடிய மன மாற்றத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என, சாதுக்கள் பிரார்த்தனை செய்தனர்.