காமியம், நிஷ்காமியம் என பக்தியை இருவகையாக சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு விருப்பத்தை மனதில் கொண்டு அது நிறைவேற பக்தி செலுத்துவது காமியம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை இப்பூவுலகில் படைத்து நல்வாழ்க்கையை அருளியிருக்கும் சுவாமிக்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தி செலுத்துவது நிஷ்காமியம். சில விஷயங்களை நாம் கேட்டு கடவுள் தருகிறார். மூச்சு விடுதல், இதயத்துடிப்பு போன்ற சில விஷயங்களை கேட்காமலே தந்திருக்கிறார். இவை நம் ஆயுளின் அடித்தளமல்லவா? இந்த ஒரு நன்மை போதாதா..! நாம் எப்போதும் கடவுளை நினைத்திருக்க! திருஞானசம்பந்தர் அருளிய துஞ்சலும் துஞ்சலிலாத போதும் என்னும் பதிகத்தை பொருள் உணர்ந்து படியுங்கள். பிறகு எப்போதும் கடவுளிடம் பக்தி செலுத்தும் எண்ணம் உங்களது இயல்பாகி விடும்.