பொறாமை கொள்வது குற்றமாகும் என்று சொல்லும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் பொறாமை கொள்ளலாம் என விதி விலக்கும் அளிக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு இறைவன் அறிவைக் கொடுத்திருக்க அவன் அதனை மற்றொரு மனிதனுக்குப் போதிக்கின்றான். அவனைப் பார்த்து பொறாமைப்படலாம். மற்றொரு மனிதனுக்கு இறைவன் செல்வத்தைக் கொடுக்கின்றான். அவன் அதனை இறைவனின் பாதையில் செலவு செய்கின்றான். இந்த மனிதரைப் பார்த்து பொறாமைப்படலாம். இந்த 2 விஷயத்தையும் தவிர்த்து மற்ற காரியங்களில் பொறாமை படுவது கூடவே கூடாது, என்கிறார்கள். ஆம்...படித்த ஒருவர் மிகச்சிறப்பாக பேசுகிறார். இவருக்கு இருக்கும் அறிவு எனக்கில்லையே, என பொறாமைப்படுவதன் மூலம், அவரைப் போலவே சிறந்த அறிஞராக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். பணத்தை ஒருவர் தர்மம் செய்வதைப் பார்த்து, இதுபோல் நம்மிடம் இருந்தாலும் தர்மத்துக்காக செலவிடுவோமே என்ற எண்ணம் வளரும். இந்த எண்ணமே அவரை உழைக்கத்துõண்டும். அவரும் செல்வந்தராகும் வாய்ப்பு கிடைக்கும். தர்மம் மேலும் தழைக்கும் என்ற அர்த்தத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள்.