பதிவு செய்த நாள்
22
செப்
2016
12:09
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தபால் அலுவலங்களிலும் கங்கை நீர் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கங்கை நீர் வழங்கும் திட்டம் துவக்க விழா ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமை வகித்தார். ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி பங்கேற்று புனித கங்கை நீர் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.பின்னர், கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் கூறியதாவது: ரிஷிகேஷில் இருந்து புனித கங்கை நீர் கொண்டு வரப்படுகிறது. 500 மி.லி., 200 மி.லி., அளவுகளில் முறையே 22, 15 ரூபாய்க்கு பாட்டில்களில் விற்பனைக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் கங்கை நீர் கிடைக்கும். ஆண்டிற்கு 12 ரூபாய் செலுத்துவதால் 2 லட்சம் ரூபாய்க்கு விபத்துக்காப்பீடு வழங்கும் திட்டம், பிரதமரின் சுடர் ஒளி திட்டம் மற்றும் ஆண்டிற்கு 330 ரூபாய் செலுத்தினால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதமரின் நட்சத்திர ஒளி பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றில் மக்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடக்கிறது.
இத்திட்டத்தில் சேர பொது மக்கள் தங்கள் பகுதி அஞ்சலகத்தில் ரூ.50 செலுத்தி ஒரு சேமிப்பு கணக்கு துவங்கினால் போதும். ஏற்கனவே கணக்கு வைத்திருப்போர் அதையே பயன்படுத்தலாம். பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் இருந்தே இதற்கான பணம் எடுத்துக்கொள்ளப்பட்டு வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே பொதுமக்கள் இதில் சேர்ந்து பயனடையலாம். மேலும், ஆட்டோ, லாரி டிரைவர்கள், சிறு வணிகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட அனைத்து பொதுமக்களும் 60 வயதிற்கு மேல் 1000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில், பிரதமரின் அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்க்கவும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த திட்டத்தில் சேருவோர், 60 வயதிற்கு மேல் தாங்கள் பெறப்போகும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே முடிவு செய்யலாம். அதற்கேற்ப மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட பிரிமீயத்தை செலுத்த வேண்டும். அவர் இறந்த பின் மனைவிக்கு வழங்கப்படும். மனைவியும் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு 1000 ரூபாய் பென்ஷன் எனில் 1.70 லட்சம் ரூபாய், 2000 எனில் 3.40 லட்சம், 3000 எனில் 5.10 லட்சம், 4000 எனில் 6.80 லட்சம், 5000 எனில் 8.50 லட்சம் மொத்தமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். உதவி கோட்ட கண் காணிப்பாளர் விஜயகோமதி நன்றி கூறினார்.