சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவரல்லாத மாராபார் செராப்பியன் என்பவர் தன் மகன் வஸிர் செராப்பியனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் இயேசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “மகனே! மக்களும் அரசும் சாக்ரடீஸின் மீது குற்றம் சுமத்தி அவரைக் கொலை செய்ததால், அத்தனே பட்டணம் என்னாயிற்று? பஞ்சமும் கொள்ளை நோயும் தானே வந்தது. சமோவா தீவு ஆட்சியாளர்கள் கணக்கியல் அறிஞர் பிதகோரசிற்கு துரோகிப்பட்டம் கட்டி உயிருடன் கொளுத்தினர். அவர்கள் என்ன அனுபவித்தார்கள் தெரியுமா? கடல் பொங்கி ஒரே நிமிடத்தில் அந்த தேசமே மணலால் மூடப்பட்டு காணாமல் போய் விட்டது. ஒருவர் கூட பிழைக்கவில்லை. யூதர்களின் ராஜா என்றழைக்கப்பட்ட இயேசுநாதரைக் கொலை செய்தார்களே... என்ன நடந்தது? அவர்களது அரசு அழிந்தது. இந்த மூன்று அறிஞர்களையும் கொலை செய்ததால் கடவுள் மனிதர்களைத் தண்டித்தார். இவர்கள் யாரும் உண்மையான குற்றத்திற்காக மரிக்கவில்லை என்பதைக் கவனி,” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நல்லவர்களுக்கு செய்யப்படும் துன்பம், அதைச் செய்தவர்களையே அழிக்கும் என்பது நிரூபணமாகிறது.