பதிவு செய்த நாள்
10
அக்
2016
11:10
ஆயிரம் ஆண்டுகள் பூலோகத்தில் தவம் செய்த மகிஷாசுரன், பிரம்மாவிடம் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் நேரவேண்டும் என்ற வரத்தைப்பெற்றான். ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுக்கு முடிவு கட்ட சிவன் தன்னுடைய ஆற்றலையும், ஆயுதமான திரிசூலத்தையும் அம்பிகைக்கு வழங்கினார். அதன் பின், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் தங்களின் ஆற்றல், ஆயுதங்களையும் வழங்கினர். பலம் பெற்ற அம்பிகை துர்க்காதேவியாக சிங்க வாகனத்தில் புறப்பட்டார். மகிஷாசுரன், தேவியை எதிர்த்துப் போரிட்டான். அவளோ திரிசூலத்தை ஏவி அவனை வதம் செய்தாள்.
‘ஜெய ஜெய தேவி துர்காதேவி என்று தேவர்கள் அனைவரும் தேவியின் வெற்றியைக் கொண்டாடினர். வெற்றிக்குரிய அந்த நாளே விஜயசமி விழாவாக கொண்டாடப்படுகிறது.
பாசத்திருவிழா: நவராத்திரி, மேற்கு வங்கத்தில் காளி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பார்வதி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்தவீட்டிற்கு வருவதாக கருதுகின்றனர். இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் அவரவர் பிறந்த வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை, விருந்து கொடுத்து உபசரிப்பர். தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால், பெற்றோரே மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர். இதனால், பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை வளர்க்கும் பாசத் திருவிழாவாகத் திகழ்கிறது.
தேவியை பூஜித்த ராமர்:நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை புராணங்கள் சொல்கின்றன. மது,கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து அன்னை பராசக்தியை லலிதா சகஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களால் தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்யக் கிளம்பிய ராமர் வெற்றிக்காக தேவியை வழிபாடு செய்தார். இதனால், நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியின் ஒன்பது வடிவங்களில் மக்கள் வணங்குகின்றனர்.