புராதான சின்னமான ராஜதானி சிவன் கோயில் புனரமைக்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2016 11:10
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ராஜதானியில் சிதிலமடைந்துள்ள புரதான சின்னமாக விளங்கும் சிவன் கோயிலை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இக்கோயில் இடிந்து விழும் நிலையிலும் ஆண்டு தோறும் சித்திரையில் விழா எடுத்து வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் சிவன், பார்வதிக்கு தனித்தனி கருவறைகள் உள்ளன. பார்வதி கருவறையில் உள்ள சுரங்கப்பாதை 3 கி.மீ.,துாரம் சென்று,தெப்பம்பட்டி நாகலாற்றின் கரையில் சிதிலமடைந்த பெருமாள் கோயிலுக்கு செல்லும்படியாக உள்ளதாக இப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். கோயில் வளாகத்தின் வலப்புறத்தில் கிணறு உள்ளது. சிவன் கோயில் கருவறையில் இருந்து பூமிக்கடியில் உள்ள பாதை வழியாகச்சென்று கிணற்றில் நீர் கொண்டு வந்தே சுவாமிக்கு அன்றாடம் அபிஷேகம் செய்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
பழங்கால சிற்ப கலையின் சிறப்பு:
கோயிலில் உள்ள பெரிய துாண்கள், கூரையை தாங்கி நிற்கும் நீளமான கருங்கற்கள் பழங்கால சிற்பக்கலையை உணர்த்துவதாக உள்ளது. பல ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த அபரிமிதமான மழையால் கோயில் சிதிலமடைந்ததாகவும், இந்தியாவில் முகலாயர்கள் படையெடுப்பின்போது கோயில் சிதைக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
மன்னர் வழிபாடு செய்த இடமே ராஜதானி:
புரதான கோயில்கள்குறித்து ஆய்வு செய்து வரும் ஓவிய ஆசிரியர் எம்.முத்துவன்னியன்,“ பிற்கால பாண்டிய மன்னர் வருஷநாடுமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வேட்டைக்கு வந்து சென்ற காலத்தில் ராஜதானி குறும்பபட்டி அருகே ‘டென்ட்’ அமைத்து தங்கி இருந்துள்ளார். மதுரையில் இருந்து வந்த மன்னர் தாம் தங்கி இருந்த இடத்திலேயே சொக்கநாதரை வழிபடும் விதமாக சொக்கநாதருக்கும்,மீனாட்சி அம்மனுக்கும் உருவாக்கப்பட்டதே இக்கோயில். மன்னர் தங்கி வழிபாடு செய்து சென்ற இடமே பின்னர் ராஜதானி என்றழைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்க வேண்டும்:
சிவ சக்தியின் வழிபாட்டுக்குரிய இடமாக இருந்துள்ளது. பழங்காலத்தின் சிறப்புக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள இக்கோயில் தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்களும் உள்ளது. அவை தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை. இக்கோயிலில் உள்ள சுரங்கம் மூலம் தொன்மையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோயிலின் பழமை மாறாமல் புனரமைப்பு செய்து வழிபாட்டுத்தலமாக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.