கொடைக்கானல்: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியருகே அரிய வகையான ருத்ராட்ச மரங்கள் காய்க்கத் துவங்கியுள்ளன.
பக்தர்கள் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச கொட்டைகளை சிவபெருமானின் அடையாளமாக கருதி வணங்குகின்றனர். இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும் ருத்ராட்ச மரங்கள் கொடைக்கானல் வனப்பகுதியிலும் உள்ளது. சுற்றுலா பயணிகள் இம்மரங்களின் அருகே நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர். கொடைக்கானல் டைகர் சோழா பகுதியில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட மரத்தில் ருத்ராட்சம் காய்க்க துவங்கியுள்ளது. பழுத்தும், பறவைகளால் கொத்தி கீழே விழும் ருத்ராட்ச காய்களை பொதுமக்கள் பூஜைக்காக எடுத்து செல்கின்றனர். வன அலுவலர் முருகன் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சோலை காடுகளில் ருத்ராட்ச மரங்கள் உள்ளன. அவை கணக்கெடுக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது, என்றார்.