பதிவு செய்த நாள்
13
அக்
2016
12:10
திருவிடந்தை: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் நிலம், காகித தயாரிப்பிற்கான சவுக்கு பயிரிட, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு, நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் முடிவு : தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. காகித தயாரிப்பில், சவுக்கு, தைலம் ஆகிய மரங்கள், முக்கிய மூலப்பொருட்கள் என்பதால், அவற்றை பயிரிட்டு வளர்க்க நிறுவனம் முடிவெடுத்தது.மர வளர்ப்பிற்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின், பயன்பாடற்ற நிலங்களை, நீண்ட கால குத்தகைக்கு பெற அரசிடம் கோரியது.
அரசும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், அறநிலையத்துறை, நிறுவனம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்குரிய, திருவிடந்தை மற்றும் தெற்குப்பட்டு பகுதிகளின், 179 ஏக்கர்; திருப்போரூர் அடுத்த இள்ளலுாரின், 56 ஏக்கர் நிலங்கள், 15 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.நிறுவனம், சவுக்கு, தைலம் ஆகிய மரக்கன்றுகள் பயிரிட்டு, பராமரித்து, பாதுகாத்து வளர்க்கும். குறிப்பிட்ட ஆண்டுகளில் முதிர்ந்ததும் வெட்டப்படும். மரவெட்டு கால சந்தை மதிப்பில், நிறுவனம், 70 சதவீதம்; அறநிலையத்துறை, 30 சதவீதம் என, பகிர்ந்து கொள்ளும். இத்தகைய ஒப்பந்தம் குறித்து, அரசிதழில் வெளியிடப்பட்டு, பத்திரிகையிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. குத்தகை இந்நிலையில், திருவிடந்தை, தெற்குப்பட்டு ஆகிய இடங்களில், அண்மையில் நிலத்தை சீரமைக்க, நிறுவனம் முயன்றபோதுதான், குத்தகை பற்றியே அப்பகுதியினருக்கு தெரிந்தது. கோவில் நிலங்களை, உள்ளூர் மக்களுக்கே குத்தகைக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தகராறு செய்தனர். அதாவது, கோவில் நிர்வாகம், 20 ஆண்டுகளுக்கு முன், இந்நிலத்தை அப்பகுதியினருக்கு, குத்தகைக்கு வழங்கியது. அவர்கள் சவுக்கு வளர்த்து, சில ஆண்டு களுக்கு முன் முதிர்ந்தது. பொது ஏலத்தில் விற்று, வருவாயில், கோவில் நிர்வாகம், 50 சதவீதம், குத்தகைதாரர், 50 சதவீதம் என, பகிர்ந்தனர். மீண்டும் குத்தகைக்கு வழங்கப்படாமல், சில ஆண்டுகளாக தரிசாக இருந்த நிலையில், தற்போது காகித ஆலை நிறுவனத்திடம், குத்தகைக்கு, அரசு ஒப்படைத்துள்ளது. இத்தகைய ஒப்பந்தம் பற்றி தங்களுக்கு தெரியாது என, மரக்கன்று நடுவதை, உள்ளூர் மக்கள் தடுத்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிடும்படி, அவர்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.