பதிவு செய்த நாள்
15
அக்
2016
10:10
கீழக்கரை: ராமாயண காலத்தில் ஜாம்பவான் (கரடி முகம்) என்பவரால் ஆஞ்சநேயரின் சுயபலத்தை வெளிக்கொணர்வதற்காக அவருக்கு தன்முனைப்பு பயிற்சி (மோட்டிவேஷன்) அளிக்கப்பட்ட பெருமைக்குரியது சேதுக்கரை கடற்கரை. கிரதாயுகத்தில் ராமாயண இதிகாச சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏராளம் உள்ளது. சுக்ரீவனின் படையில் ஆலோசனை குழுதலைவராக இருந்தவர் ஜாம்பவான். இலங்கை செல்வதற்காக ஆஞ்சநேயர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். இதை உணர்ந்த ஜாம்பவான், ஆஞ்சநேயருக்கு சுய முன்னேற்றக் கருத்துகள், தன் முனைப்பு பயிற்சி அளித்தார்.
இதன்மூலம் தன்னுள் இருக்கும் அபரிமிதமான பலத்தை உணர்ந்த ஆஞ்சனேயர், ஒரே தாவில் இலங்கை சென்றதாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேதுக்கரையில் நடந்த ஆலோசனையின் விளைவே, இன்று உலக நாடுகளுக்கெல்லாம் தன்முனைப்பு பயிற்சி (மோட்டிவேஷன் வகுப்பு) நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் வரலாற்று ஆர்வலர் கே. சத்தியமூர்த்தி கூறியதாவது: வைணவ மடாதிபதிகளிடமிருந்து பெறப்பட்ட தக்க சான்றுகள் மூலம் சேதுக்கரையின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. பெரிய வர்த்தக நிறுவனங்கள், தமது பணியாளர்கள், ஏஜென்டுகள், வாடிக்கையாளர்களுக்கு சுயமுன்னேற்றம், தன்முனைப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்கி வருவதை கடமையாக கொண்டுள்ளன. ஆஞ்சநேயரின் பலத்தை வெளியுலகிற்கு நிரூபித்த ஜாம்பவான் சேதுக்கரையில், இதற்கான யுக்தியை கையாண்டுள்ளார். இதன் மகத்துவம் அறிந்த பல்கலை, கல்லுாரி பேராசிரியர்கள், சேதுக்கரைக்கு கல்விச்சுற்றுலா வரும்போது, அங்குள்ள இடத்தில் சுயமுன்னேற்ற கருத்துக்களை மாணவர்களுக்கு விதைப்பதை காணலாம். வரலாற்று சிறப்புமிக்க சேதுக்கரை சேதுபந்த ஜெயவீர ஆஞ்சநேயரை தரிசிக்க தினமும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர், என்றார்.