பதிவு செய்த நாள்
17
அக்
2016
12:10
பழநி:பழநி மலைக்கோயில் முடிக் காணிக்கை கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதிக்கு அடுத்து பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். இவர்களின் வசதிக்காக சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.5 நாவிதர்களுக்கு பங்கு வழங்கப்படுகிறது. தங்களுக்கு சம்பளம் இல்லை எனக்கூறி பக்தர்களிடம் ரூ.50 முதல் ரூ.100 வரை நாவிதர்கள் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக புகார் வருவதால் முடிக்காணிக்கை கட்டணத்தை ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கோயில் பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் அதிருப்தி: கேரள மாநிலம் கொல்லம் விக்கிரமன் கூறுகையில்,“நானும்,எனது மனைவியும் மொட்டை எடுத்தோம், ரூ.10டோக்கன் போக நாவிதருக்கு தலா ரூ.100 கொடுத்தோம். அறிவிப்பு பலகையில் இன்று முதல் முடிகாணிக்கை டோக்கன் ரூ.30ஆக உயர்த்தியுள்ளது, அதிர்ச்சிஅளிக்கிறது. ஆண்டிற்கு ரூ.பலகோடி வருமானம் உள்ள பழநி தேவஸ்தானம் நாவிதர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கி திருப்பதிபோல முடிகாணிக்கையை இலவசமாக்க வேண்டும்,” என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ முடிக் காணிக்கை நிலையங்களில் பக்தர்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதாக வரும் புகாரை தவிர்ப்பதற்காக ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால் பக்தர்கள் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.