பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
சென்னை;சோழர் காலம், கோவில் கலையின் பொற்காலம், என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரன் பேசினார். ஸ்ரீ நாராயண குருவைய்யா செட்டி அறக்கட்டளை சார்பில், காவிரிக்கரையில் கவின்மிகு சோழர் கால கற்றளிகள் என்ற சொற்பொழிவு, சென்னை அருங்காட்சியகத்தில், நேற்று நடந்தது. இதில், தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரன் பேசியதாவது: காவிரியின் இரு கரைகளிலும், முற்கால சோழர்கள், கற்றளிகள் எனப்படும் கற்கோவில்களை நிறைய கட்டி உள்ளனர். குறிப்பாக, திருச்செந்துறை, பழுவூர், பெருங்குடி, பாச்சில், துடையூர், சோழமாதேவி, திருப்பாற்றுரை ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் மிகவும் சிறப்புடையவை. திருச்செந்துறையில், பூதி ஆதித்த பிடாரி என்ற, இருக்குவேளிர் குல பெண், 9ம் நுாற்றாண்டில் கட்டிய கோவில் உள்ளது. அங்கு, முதலாம் ஆதித்தன் துவங்கி, இரண்டாம் ராஜராஜன் வரையிலான சோழர்கள், விஜய நகர அரசன் ஸ்ரீரங்க தேவர் ஆகியோரின், 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவில் விமானத்தின் கழுத்துப் பகுதியில், ஆடல் மகளிர் சிற்பங்கள் உள்ளன.
நெற்றிப்பட்டம்: பழுவூர் கோவில் கல்வெட்டுகள், வழிபாட்டு தானங்கள் பற்றிய செய்திகளை கூறுகின்றன. பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவிலின் இறைவனை வணங்கியதால், போசள மன்னன் வீரராமநாதனின் மகனுக்கு பார்வை கிடைத்ததையும், அவன், நெற்றிப்பட்டம் வழங்கியதையும் கல்வெட்டு கூறுகிறது. கொல்லிமலை பகுதியை ஆண்ட, மழவர்கள் என்னும் சிற்றரசர்கள் கட்டிய கோபுரப்பட்டி, திரு அமலீசுவரத்தில், செம்பியன் மாதேவி, குந்தவை உள்ளிட்டோர் வழிபாட்டுக்கு அளித்த கொடைகள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலுக்கு, தளிச்சேரி பெண்கள், மெய்க்காப்பாளன் அனுப்பப்பட்டதை, பாச்சில் மேற்றளி கோவில் கல்வெட்டு கூறுகிறது. துடையூர் கோவில் கருவறை தேவக்கோட்டத்தில், விநாயகருக்குப் பதில், சரஸ்வதி சிற்பம் உள்ளது. இதை, தஞ்சை பெரிய கோவிலின் முன்னோடி எனலாம்.
செப்பு சிலைகள்:சோழமாதேவி, கைலாயமுடையார் கோவிலுக்கு, ஆடவல்லான், உமா பரமேசுவரியார், இடபாகன தேவர் ஆகிய செப்பு சிலைகளை, ராஜராஜனின் மனைவியரில் ஒருத்தியான, சோழமாதேவி வழங்கியதை, கல்வெட்டு அறிவிக்கிறது. திருப்பாற்றுரையில், நுண்ணிய சிற்பங்களுடன் கூடிய மகர தோரணமும், துாண்களும் உள்ளன. பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட, பழுவூர் கோவில், தனித்தனியாக பரிவார கோவில்களை கொண்டுள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள், தனக்கு கீழ் உள்ள சிற்றரசர்களையும் அரவணைத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கட்டடக்கலை, சிற்பக்கலையில் சிறந்த கற்கோவில்களை கட்டியுள்ளனர். அவர்களின் காலம், கோவில் கலைகளின் பொற்காலமாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், நாம், 1,500 ஆண்டுகளுக்கு முன், தனித்துவமான செப்புச்சிலைகளை செய்யும் அறிவியலை அறிந்திருந்தோம். தற்போது, நம் வரலாற்றை உணராத தலைமுறையாய் இருக்கிறோம் என்பது வருத்தமளிக்கிறது, என, அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர், டி.ஜெகநாதன் பேசினார்.