அழகர்கோவிலில் அதிகாரி நியமனம் எப்போது பெருமாளே! கிடப்பில் வளர்ச்சி பணிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 12:10
அழகர்கோவில்: அழகர்கோவிலில் ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாக அதிகாரி நியமிக்கப்படாததால் கோயில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அழகர்கோவில் மலை அடிவாரத்தில் சுந்தரராஜ பெருமாள் கோயில், மலை மீது சோலைமலை முருகன், நுாபுரகங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோயில்கள் உள்ளன. அழகர் மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகப் பணிகளை துணை கமிஷனர் ரேங்கில் உள்ள நிர்வாக அதிகாரி கவனித்து வந்தார். கள்ளழகர் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இருந்தால் இணை கமிஷனர் ரேங்கில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அழகர்கோவில் ஆண்டு வருவாய் 11 கோடி ரூபாயை தாண்டியும் இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்படவில்லை.
மேலும், அத்துடன் சோலைமலை முருகன் கோயில், நுாபுரகங்கை, ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பெருமாள், ஐயப்பன், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்கள் அழகர்கோவில் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு இக்கோயில் இணை கமிஷனர் அந்தஸ்துக்கு உயர்த்த அறநிலையத்துறை தயாரானது.இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்டில் கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை அப்பணியிடம் காலியாக உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிர்வாக அதிகாரியே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பொறுப்பு அதிகாரியால் உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதால் கோயிலில் நிறைவேற்றப்பட வேண்டிய பல வளர்ச்சிப் பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. ராக்காயி அம்மன் கோயில், மேலுார் ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இன்னும் நிறைவுப் பெறாமல் உள்ளதால் கும்பாபிஷேகம் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி இணைகமிஷனர் அந்தஸ்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.