பதிவு செய்த நாள்
01
நவ
2016
11:11
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, யாக சாலை பூஜையுடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. காக்க காக்க... கனகவேல் காக்க... என தொடங்கும் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட, ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று தொடங்கியது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1,320 படிக்கட்டுகள் வழியாக, முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யாக பூஜை, ஹோமங்கள் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட, 108 வகையான திரவியங்களுடன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விரதமிருக்கும் பக்தர்கள், கைகளில் காப்பு கட்டி கொண்டனர். கந்த சஷ்டி விழா, வரும், 5 வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த நாட்களில் காலை, 9:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, விழா நாட்களில், அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.