நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, வரும் 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு தவசு ஏறுதல், சிவபெருமானிடம் சூரபதுமன் வரம் பெறுதல், தாருகா சூரன் வதம் செய்தல் நடக்கிறது. 4ம் தேதி இரவு 8:00 மணிக்கு முருகப்பெருமான் காமாட்சி அம்மனிடம் சக்தி வேல் வாங்குதலும், அதனைத் தொடர்ந்து சிங்கமுக சூரன் வதம் செய்தல் நடக்கிறது. 5ம் தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு வீரபாகு தேவர்கள் ஊர்வலமாகச் சென்று அனைத்து கோவில்களிலும் பூஜை செய்து மாலை 4:00 மணிக்கு கம்பத்தடிக்கு மாவிளக்குடன் புறப்பாடும்; 5:00 மணிக்கு கம்பம் ஏறுதலும், சூரபத்மனை வதம் செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழாகுழுவினர்கள் செய்து வருகின்றனர்.