பதிவு செய்த நாள்
03
நவ
2016
12:11
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவை போற்றினர். திண்டுக்கல்லில், திருச்சி ரோடு ஆர்.சி., கல்லறை மைதானத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களின் நினைவிடங்களை மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். முன்னோர்களுக்கு பிடித்த உணவு பண்டங்களை படைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறப்பு திருப்பலி: மாலை 4:00 மணிக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்ச்சாமி தலைமையில், பாதிரியார்கள் ஸ்டேன்லி ராபின்சன், அமலன் பங்கேற்ற கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் சி.எஸ்.ஐ., கல்லறைத் தோட்டத்திலும் கூட்டு திருப்பலி நடந்தது. மேலும் மேற்கு மரியநாதபுரம், மேட்டுப்பட்டியிலும் திருப்பலியும், பிராத்தனையும் நடந்தது.
வத்தலக்குண்டு: இங்குள்ள புனித தோமையார் சர்ச்சில் பாதிரியார் சேவியர் தலைமையில், உதவி பாதிரியார்கள் ரெக்ஸ்பீட்டர், லாரன்ஸ் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஊர்வலமாக கல்லறைக்குச் சென்று சமாதிகளுக்கு புனித நீர் தெளித்தனர். பின் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். மேலும் பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை, மைக்கேல்பாளையம், சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. சின்னாளபட்டி:ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார் பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள், முன்னோர்களின் நினைவிடங்களில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி நிறை வேற்றல், பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தது.