பதிவு செய்த நாள்
05
நவ
2016
12:11
கந்தசஷ்டி விழாவை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவம், விமரிசையாக நடைபெற இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், கந்த சஷ்டி பெரு விழா, 31ம் தேதி காலை, 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது.
இரண்டு நாள்: இதையடுத்து, ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. கந்தசஷ்டி விழாவை ஒட்டி, இரண்டு நாள் விழா இன்று துவங்குகிறது. நவ.,5 மாலை, 3:30 மணிக்கு, பஜாரில் உள்ள சர்ப விநாயகர் மற்றும் நாகவல்லி அம்மன் கோவிலில் உள்ள அம்மனிடம் சக்திவேல் பெறுதல், மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 6:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். இரண்டாம் நாளான நவ.,6, ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதே போல், திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கத்தில், வள்ளி, தேவசேனா சமேத குமார சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடந்து வருகிறது.
நாக சதுர்த்தி: விழாவின் நான்காம் நாளான நவ.,4 முன்தினம் இரவு, நாக சதுர்த்தியை முன்னிட்டு உற்சவர் முருக பெருமான் நாகர் வாகனத்தில் வள்ளி, தேவசேனாவுடன் எழுந்தருளினார். நாகர் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவ.,5 மாலை, 6:00 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
பொன்னேரி: திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் முருக பெருமானுக்கு சன்னதி உள்ளது. சிறப்பு வழிபாடுகளோடு நடந்து வரும், கந்த சஷ்டியின் கடைசி நாளான நவ.,5 மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீப ஆராதனைகளும் நடைபெறுகிறது. நவ.,6 மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானைசமேத ஸ்ரீமுருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகமும் நடைபெறுகிறது.
கடம்பத்துார்: ஸ்ரீதேவிக்குப்பத்தில் அமைந்துள்ளது வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகன் கோவில்.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, நவ.,6 காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெறவுள்ளது.