பதிவு செய்த நாள்
06
அக்
2011
12:10
மதுரை : நினைத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டுதல்கள் ஏறெடுக்கும் மக்களின், நம்பிக்கை நிறைவேறுமா, நிறைவேறாதா என்பதை நேரிடையாக உணர்த்தும் ஒரு சுயபரிசோதனை கூடமாக, விடை தருகிறது கூட்டங்கற்கள். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து, சதுரகிரி மலைப் பயணம் மேற்கொள்ளுவோர் தாணிப்பாறை, குதிரை ஊற்று, படிவெட்டி பாறை, அந்தியூத்து, சின்னபசுக்கடை, நாவல் ஊற்று என பல முக்கியத்துவமான இடங்களை கடந்து பெரிய பசுக்கடைக்கு வருகின்றனர். இங்கு உள்ள ஒரு புளியமரத்தடியில் உள்ள கூட்டங்கற்கள் பல கதைகளை சுமந்து நிற்பதை பார்க்கலாம். இந்த கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அது கீழே விழவில்லை என்றால், நினைத்த காரியம் நிறைவேறுமாம். வீடுகட்ட, திருமணத் தடை நீங்க, நல்ல வாழ்க்கை அமைய என பல வேண்டுதல்களுடன் வருவோர் குறைந்தது நான்கு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். உயரம் கூடக்கூட நினைத்த காரியம் உடனே கைக்கூடும் என்பது தான் ஐதீகம். இதில் ஒருவர் அடுக்கி வைத்துள்ள கல்லில் இருந்து மற்றொருவர் கல் எடுத்து அடுக்கக்கூடாது. என்பது எழுதப்படாத விதிமுறை. ஆனால் இதை இங்கு பலர் பின்பற்றுவது இல்லை. வேண்டுதலை ஏறெக்க மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்வோருக்கு, வேண்டுதல் கைகூடுமா என்பதற்கு, பாதிவழியிலே, இங்கேயே விடை கிடைத்துவிடுவதாக, பலன் அடைந்தோர் ஆச்சரியத்துடன் தங்கள் உணர்வுகளை விவரிக்கின்றனர்.