புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு தங்கத்தேர் வீதியுலா இன்று நடக்கிறது. கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்திலேயே தங்கத்திருத்தேர் கொண்ட பிரசித்திப் பெற்ற முதன்மையான ஆலயமாக மணக்குள விநாயகர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் உற்சவர் மணக்குள விநாயகர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விஜயதசமி நாளில் தங்கத்தேரில் திருவீதியுலா வருவது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்தாண்டு இன்று 6ம் தேதி விஜயதசமி நன்னாளில் மாலை 7 மணிக்கு மணக்குள விநாயகர் தங்கத்திருத்தேரில் திருவீதியுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தங்கத்தேரில் விநாயகப்பெருமாள் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் நேரடியாக தரிசனம் தருவதற்காக மாடவீதியில் திருவீதியுலா வரும் வேளையில், அவரை தரிசிப்பதில் முக்கியப் பலன்கள் உண்டு. அனைத்து பக்தர்களும் விஜயதசமி நன்னாளில் மணக்குள விநாயகரை தரிசித்து நன்மைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.