பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
போச்சம்பள்ளி: மத்தூர் அருகே நடந்த காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது, கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி கிராமத்தில், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், விநாயகர் ஆகிய மூன்று கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி கடந்த, 9 காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, 7:00 மணிக்கு முதல்கால பூஜை நடந்தது. 10 காலை இரண்டாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நாதஸ்வர இசை, பம்பை முழக்கம் மற்றும் காலை, 7:00 மணிக்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 8:00 மணிக்கு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும், 9:00 மணிக்கு காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் மலர்கள், கோவில் கோபுரங்கள் மற்றும் பொதுமக்கள் மீது, ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.