பதிவு செய்த நாள்
07
அக்
2011
10:10
மைசூரு : உலகப்புகழ் பெற்ற, தசரா உற்சவத்தின் ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூருவை குலுக்கியது. மைசூரு, 401 வது ஆண்டு தசரா விழாவையொட்டி நடந்த ஜம்பு சவாரியை நேற்று நந்தி கம்பத்திற்கு பூஜை செய்து, முதல்வர் சதானந்த கவுடா துவக்கி வைத்தார். தங்க அம்பாரியில் அன்னை சாமுண்டீஸ்வரியை சுமந்தபடி, பலராமா யானை தலைமையில், 12 யானைகள் மைசூரு அரண்மனையிலிருந்து பன்னி மண்டபம் வரையிலான, 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றது. இதை தொடர்ந்து, சரித்திர நிகழ்வுகளை விளக்கும் வாகன அணி வகுப்பு நடந்தது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சாதனைகளை விளக்கும் வகையில் ஊர்திகள் இடம் பெற்றன. கலாசார கலைஞர்கள் குழுக்கள், அவர்களுடன் கவுடி, அட்டல பல்லக்கி, அரண்மனை கலைஞர்கள், பட்டத்து யானை, குதிரை, குதிரை ஏறிய போலீசார் உட்பட நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்து நாட்களும் விமர்சையாக கொண்டாடப்பட்ட மைசூரு தசரா விழா, பன்னி மண்டபத்தில் நடந்த, "டார்ச் லைட் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.