பதிவு செய்த நாள்
07
அக்
2011
10:10
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. பல்வேறு நோய்கள், தொழிலில் நஷ்டம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அம்மனுக்கு வேடம் அணிவதாக நேர்சை செய்வார்கள். தங்களுக்கு குணமடைந்தவுடன் பல்வேறு வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பிரித்து கோயில் உண்டியலில் சேர்ப்பார்கள். அம்மனும், அப்பனும் ஒருசேர காட்சியளிக்கும் அற்புத காட்சி வேறு எந்த கோயில்களிலும் காணாத அற்புத காட்சியாகும். பல்வேறு சிறப்புகள் உடைய குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப்.27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கொடியேற்றம் நடந்தவுடன் பக்தர்கள் காப்பு கட்டி வேடம் அணிந்து காணிக்கை பிரிக்க துவங்கினர்.
தினசரி காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜைகள் நடக்கும். மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் உள்ளன. இந்த தசரா குழுக்கள் திருவிழாவின் 6ம் திருவிழாவான அக்.2ம் தேதி முதல் காப்பு கட்டி காளி, அம்மன், சிவன், கிருஷ்ணன், சுடலைமாடன், பெண், போலீஸ், குறவன் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து மேளம், கரகம், டிஸ்கோ போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை பிரிப்பார்கள். எனவே உடன்குடி மற்றும் மூன்று மாவட்ட பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மே லும் தினசரி இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலத்தில் தெரு பவனியும் நடந்தது. முக்கிய நிகழ்வான மகி ஷா சூரசம்ஹார நிகழ்ச்சியை காண நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் நடந்தது. விழாவில் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் அருகில் தண்டுபத்து சண்முகபெருமாள்-பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் தண்டுபத்து ராமசாமி-தேவி குடும்பத்தினர் நீர்மோர், ரஸ்னா வழங்கினர். ஏற்பாடுகளை சந்தையடியூர் ரவிராஜா செய்திருந்தார். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசு சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திருச்செந்தூர் டி.எஸ் .பி.,தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் செய்திருந்தார்.