கோவை : கோவை ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை ராஜவீதியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், நேற்று நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பக்திப்பரவசத்துடன், கத்தி வீசி ஆடியபடி வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். உடலில் கத்தி வெட்டிய இடத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் பக்தர்கள் ஆடிச்சென்றது, மெய்சிலிர்ப்பதாக இருந்தது.