பதிவு செய்த நாள்
07
அக்
2011
12:10
நமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் தீண்டாதார் என்று சொல்லுகிறோம். பட்டணம் அல்லது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அவர்களை ஒதுக்கியும் வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட சேரிகள் குஜராத்தியில் டேட்வாடா என்று சொல்லப்படுகின்றன. அப் பெயருக்கு இழிவையும் கற்பித்திருக்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவில் இப்படித்தான் யூதர்கள் ஒரு சமயம் தீண்டாதோர் ஆக இருந்தனர். அவர்கள் குடியிருக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைக்கெட்டோக்கள் என்ற இழிவான பெயர் கொண்டும் கூறி வந்தார்கள். அதே வழியில் இன்று நாம் தென்னாப்பிரிக்காவில் தீண்டாதவர்களாக இருக்கிறோம். ஆண்டுரூஸின் தியாகமும், சாஸ்திரியாரின்மந்திரக் கோலும் நம் கஷ்டங்களைப் போக்குவதற்கு எவ்வளவு தூரம் பயன்படப் போகின்றன என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.
புராதன யூதர்கள், தாங்களே கடவுளின் அன்புக்குப் பாத்திரமான மக்கள் என்றும்,மற்றவர்களெல்லாம் அப்படியல்ல என்றும் எண்ணிக் கொண்டார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சந்ததியார் விசித்தரமானதும் அநீதியானதும் ஆன வினைப்பயனை அனுபவித்தாக வேண்டியவர்களாயினர். அநேகமாக அதே மாதிரியே ஹிந்துக்கள், தாங்கள் ஆரியர்கள் அல்லது நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொண்டனர்.தமது சொந்த உற்றார் உறவினரேயான ஒரு பகுதியினரை அநாரியர்கள் அல்லது தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளினர். இதன் பயனாக,அநீதியானதேயென்றாலும் விசித்திரமான கர்ம பலன், தென்னாப்பிரிக்காவில் ஹிந்துக்களின் தலைமீது மாத்திரமல்ல,தங்கள் ஹிந்து சகோதரர்களைப் போல் அதே நிறத்தினரான முஸ்லிம்கள், பார்ஸிகள் ஆகியவர்கள் தலைமீதும், அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இப்பொழுது விடிந்திருக்கிறது.
இந்த அத்தியாயத்தை ஒதுக்கலிடங்கள் என்ற தலைப்புடன் ஆரம்பித்தேன். அதன் பொருளை ஓரளவுக்கு வாசகர் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பர்.தென்னாப்பிரிக்காவில் கூலிகள் என்ற கேவலமான பெயரை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியாவில் கூலி என்றால், சுமை தூக்குகிறவர், கூலிக்கு வேலை செய்பவர் என்றுதான் பொருள். ஆனால் தென்னாப்பிரிக்காவிலோ அதற்கு அவமரியாதையான பொருள் இருக்கிறது. பறையன் தீண்டாதான் என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொள்ளுகிறோமோ அப்பொருளே தென்னாப்பிரிக்காவில் கூலி என்பதற்குக் கொடுக்கப்படுகிறது. கூலிகளுக்குக் குடியிருக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் இடங்கள் கூலி ஒதுக்கலிடங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் ஒதுக்கலிடம் ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கிறது. ஆனால், ஒதுக்கலிடமுள்ள மற்றஇடங்களில் இந்தியருக்குச் சாசுவதக் குடிவார உரிமை இருப்பது போல் இங்கே இல்லை. ஜோகன்னஸ்பர்க்கில் அப்பகுதியில் இந்தியர், மனைகளை 99 வருடக் குத்தகைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல விஸ்தீரணம் அதிகரிக்கப்படவில்லை. ஆகையால், அவ்விடத்தில் மக்கள் நெருக்கமாகவே வசிக்க நேர்ந்தது.
அரை குறையான வகையில் கக்கூசுகளைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததைத் தவிர முனிசிபாலிடி அப் பகுதியில் வேறு எந்தவிதமான சுகாதார வசதியும் செய்யவே இல்லை. அங்கே நல்லபாட்டைகளோ, விளக்குகளோ இல்லை. அங்கே குடியிருந்தவர்களின் நலனிலேயே இது சிரத்தையில்லாமல் இருந்தபோது, அப் பகுதியின் சுகாதாரத்தை அது பாதுகாக்கும் என்பதற்கு இடமே இல்லை. அங்கே குடியிருந்தவர்களோ, நகரசபையின் சுகாதார விதிகளையும் சுகாதாரத்தையும் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகையால், நகரசபையின் உதவி அல்லது கண்காணிப்பு இல்லாமல் அவர்கள் எதுவும் செய்துகொள்ள முடியாது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம். பொதுவாகச் செல்வத்தையும் வர்த்தகத்தையும் தேடிக்கொண்டே மக்கள் வெளிநாடுகளில் போய்க் குடியேறுகிறார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியரில் பெரும்பாலானவர்கள், ஒன்றும் தெரியாத பரம ஏழை விவசாயிகள். ஆகையால், அவர்களுக்கு அளிக்க வேண்டிய எல்லாக் கவனமும் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. அவர்களைத் தொடர்ந்து அங்கே சென்ற வியாபாரிகளும், படித்த இந்தியரும் மிகச் சிலரே.
நகரசபையின் அக்கிரமமான அசிரத்தையும், அப் பகுதியில் குடியிருந்த இந்தியரின் அறியாமையும் சேர்ந்து அவர்கள் குடியிருந்த இடத்தை முற்றும் சுகாதாரக் கேடானதாக்கி விட்டன. அப்பகுதியின் நிலைமை அபிவிருத்தியடையும்படி நகரசபை ஒன்றுமே செய்யாமல் இருந்ததோடு, தங்களுடைய சொந்த அசிரத்தையினால் ஏற்பட்ட சுகாதாரக் கேட்டை, அப்பகுதியையே அழித்து விடுவதற்கு ஒரு சாக்காகவும் உபயோகித்துக்கொண்டது. அந்த இடத்தில் குடியிருக்கும் உரிமையை இந்தியரிடமிருந்து பறித்துவிட உள்ளூர்ச் சட்டசபையின் அதிகாரத்தையும் பெற்றது. நான் ஜோகன்னஸ்பர்க்கில் குடியேறியபோது அங்கே இருந்த நிலைமை இதுவே. குடியேறியிருந்தவர்களுக்குத் தங்கள் சொந்த நிலத்தில் சொத்துரிமை இருந்ததால் இயற்கையாகவே நஷ்டஈடு பெற வேண்டியவர்களாகின்றனர். சில ஆர்ஜித வழக்குகளை விசாரிப்பதற்கு என்று ஒரு விசேட நீதிமன்றம் அமைத்தார்கள். நகரசபை கொடுக்க முன்வரும் தொகையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத இந்தியருக்கு அந்த நீதிமன்றத்திடம் அப்பீல் செய்துகொள்ள உரிமை உண்டு. அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் தொகை, நகரசபை கொடுக்க முன்வந்த தொகையைவிட அதிகமானதாக இருந்தால் நகரசபையே செலவுத் தொகையையும் கொடுக்க வேண்டும்.
அங்கே குடியிருந்தவர்களான இந்தியரில் பெரும்பாலானவர்கள் என்னையே சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டனர். இந்த வழக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், அவர்களிடம் ஒன்று கூறினேன். வழக்கில் வெற்றி பெற்றால், நீதிமன்றம் என்ன செலவுத் தொகைக்குத் தீர்ப்புச் செய்கிறதோ அதுவே எனக்குப் போதும்; வழக்கின் முடிவு எதுவானாலும் ஒவ்வொரு வழக்குக்கும் எனக்குப் பத்து பவுன் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் இவ்விதம் கொடுக்கும் பணத்தில் ஒரு பாதியை ஏழைகளுக்கு வைத்திய சாலையோ அல்லது அத்தகைய வேறு ஸ்தாபனமோ ஆரம்பிக்க ஒதுக்கி வைத்துவிடப் போகிறேன் என்பதையும் அவர்களிடம் சொன்னேன். இயல்பாகவே இது அவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது. எழுபது வழக்குகளில் ஒன்றுதான் தோற்றுப் போயிற்று. ஆகவே, பெருந்தொகையே கட்டணமாகக் கிடைத்தது. வந்ததையெல்லாம் விடாமல் விழுங்கிக்கொண்டிருக்க இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகை இருந்தது. இதுவரையில் அது 1600 பவுன் விழுங்கியிருக்கிறது என்பது எனக்கு ஞாபகம். இந்த வழக்குகளுக்காக நான் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். கட்சிக்காரர்கள் எப்பொழுதும் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களில் பெரும்பான்மையோர், முன்னால் பீகாரிலிருந்தும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். தங்களுடைய குறைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுவதற்கென்று, சுயேச்சையான இந்திய வர்த்தகர்களின் சங்கத்தின் தொடர்பு இல்லாமல், தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு இருந்தார்கள்.
இவர்களில் சிலர், கபடமில்லாதவர்கள்; தாராள குணம் உள்ளவர்கள்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்களுடைய தலைவர்கள் சங்கத் தலைவரான ஸ்ரீஜெயராம் சிங்கும், சங்கத் தலைவரைப் போன்றே இருந்த ஸ்ரீபத்ரியும் ஆவார். அவர்கள் இருவரும் இப்பொழுது காலமாகி விட்டனர். அவர்கள் எனக்குப் பெரும் அளவு உதவியாக இருந்தார்கள். ஸ்ரீ பத்ரி என்னுடன் நெருங்கிப் பழகியதோடு சத்தியாக்கிரகத்திலும் முக்கியமான பங்கு எடுத்துக்கொண்டார். அவர்களையும் மற்ற நண்பர்களையும் கொண்டு, வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் வந்து குடியேறி இருந்த அநேக இந்தியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வெறும் சட்ட ஆலோசகர் என்பதைவிட அவர்களுக்கு நான் சகோதரனாகவே ஆகிவிட்டேன். மறைவாகவும், பகிரங்கமாகவும் அவர்கள் அனுபவித்த துக்கங்களிலும் கஷ்டங்களிலும் நானும் பங்கு கொண்டேன். அங்கே இந்தியர் என்னை எப்படி அழைத்து வந்தார்கள் என்பதை அறிவது கொஞ்சம் ருசிகரமானதாகவே இருக்கக்கூடும். காந்தி என்று என்னைக் கூட்பிட அப்துல்லா சேத் மறுத்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக யாரும் என்னை சாஹேப் (துரை) என்று கருதவோ, அப்படி அழைத்து என்னை அவமதிக்கவோ இல்லை. அப்துல்லா சேத் சிறந்த சொல் ஒன்றைக் கண்டுபிடித்தார். பாய், அதாவது சகோதரர் என்பது தான் அச்சொல். மற்றவர்களும் அதையே பின்பற்றி, நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துவிடும் வரையில் என்னை பாய் என்றே கூப்பிட்டு வந்தார்கள். முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்த இந்தியர் இப்பெயரால் என்னை அழைத்தபோது அதில் இனிமையானதொரு மணம் கமழ்ந்தது.