பொய்கைகரைப்பட்டி தெப்பம் மண்டபம் பாதுகாக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2016 11:11
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் பொய்கைகரைப்பட்டி தெப்பத்தில் சிதிலமடைந்துள்ள மைய மண்டபத்தை புதுப்பித்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது கள்ளழகர் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடப்பது வழக்கம். இவற்றில் சித்திரை திருவிழா மற்றும் ஆடித் தேரோட்டம் மிகவும் சிறப்பு பெற்றது. இவ்விரு விழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். அதுபோல் மாசி மாதம் நடக்கும் தெப்ப உற்சவமும் முக்கியமானது. அழகர்கோவில் மலை சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு தெப்பக்குளம் அமைக்க முடியவில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் அருகில் உள்ள பொய்கைகரைப்பட்டி கிராமத்தில் தெப்பக்குளம் அமைத்தார். தெப்ப உற்சவம் நடக்கும் போது அன்ன வாகன தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் வலம் வரும் சுந்தரராஜ பெருமாள் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் எழுந்தருளுவார். மாலையில் மைய மண்டபத்தில் இருந்து மீண்டும் தெப்பத்தை சுற்றி வந்து கரையில் அமைக்கப்படும் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபம் பராமரிப்பின்றி சிதைந்து விட்டது. எப்போது யார் தலையில் விழும் என்று தெரியவில்லை. மண்டபத்தை சீர் செய்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் முன்வரவில்லை. பல ஆண்டுகளாக தெப்பத்திருவிழாவிற்கு வரும் பெருமாள், கரையை சுற்றியே வலம் வந்து மாலை வரை கரையில் உள்ள தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளி கோயிலுக்கு திரும்பி விடுகிறார். இதை தவிர்க்க, மைய மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். தெப்பத்தை சுற்றி உள்ள இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.