மூவாயிரம் கி.மீ., சைக்கிள் யாத்திரை செல்லும் ஆந்திர ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2016 11:11
திண்டுக்கல் : ஆந்திரா மாநிலம் வடக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு மூவாயிரம் கி.மீ., சைக்கிளில் யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று திண்டுக்கல் வந்தனர்.ஆந்திர மாநிலம் சங்கப்பராஜபுரத்தை சேர்ந்தவர்கள் நாகசீனிவாஸ் 33, சுப்ரமணியன், 24, வெங்கடேஸ்வரராவ் 41, கிரண்குமார், 22. இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவிலுள்ள மேற்கு கோதாவரி மாவட்டம் சங்கப்பராஜபுரத்தில் இருந்து கார்த்திகை துவங்குவதற்கு முன்பாக சைக்கிளில் புறப்பட்டு திண்டுக்கல் வழியாக சபரிமலைக்கு யாத்திரை சென்று வருகின்றனர். திண்டுக்கல் வந்த யாத்திரைக்குழுவின் வெங்கடேஸ்வரராவ் கூறியதாவது: கார்த்திகை மாதம் துவங்குவதற்கு இரண்டு நாள் முன்பாகவே சைக்கிளில் சங்கப்பராஜபுரத்தில் யாத்திரையை துவக்கினோம். அங்கிருந்து சென்னை வந்தோம்.பின், திருச்சி வழியாக திண்டுக்கல்- - குமுளி - -பம்பை வழியாக சபரிமலை செல்கிறோம் எங்கள் ஊரிலிருந்து ஆயிரத்து 500 கி.மீ., துாரத்தில் சபரிமலை அமைந்துள்ளது.சுவாமி தரிசனம் முடிந்து, மீண்டும் சைக்கிளிலேயே ஊர் திரும்புவோம்.முதல் ஆண்டில் 15 பேர் சேர்ந்து நடைபயணமாக வந்தோம். பிறகு சைக்கிளில் நாள் ஒன்றுக்கு 150 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சபரிமலை சென்றோம். பத்து நாட்கள் பயணத்தில் சன்னிதானம் அடைந்து விடுவோம். வழியில் இடையூறு எதுவும் வந்ததில்லை. ஓட்டல்களில்தான் சாப்பிடுகிறோம். ஐயப்பனின் அருளால் மன நிம்மதி கிடைப்பதோடு, சைக்கிளில் செல்வதால் உடலும் வலுவாகிறது, என்றார்.