பதிவு செய்த நாள்
19
நவ
2016
11:11
உடுமலை: உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. ஒளியேற்றும் தீபங்கள் தயாரித்தாலும், வாழ்வில் பிரகாசம் இல்லையென தெரிவிக்கின்றனர் தொழிலாளர்கள். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கோவில்கள், வீடுகள் மற்றும் வீதிகளில் விளக்குகள் ஏற்றி தீபஒளித்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மண்பாண்ட கலைஞர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே அகல் விளக்குகள் உற்பத்தியை ஆரம்பித்து விடுகின்றனர். என்னதான் நாகரிக வளர்ச்சி; வசதி வாய்ப்புகளால் பீங்கான், பித்தளை, சில்வர் மற்றும் பலவித மெட்டல்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும்; சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு பொதுமக்களிடம் எப்போதும் சிறப்பான வரவேற்பு உண்டு. கார்த்திகை மாதம் பிறந்துவிட்டதால் மண்பாண்ட கலைஞர்கள், அகல் விளக்குகள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலையில், பூளவாடி, புக்குளம், கோட்டமங்கலம், பள்ளபாளையம் உட்பட பல இடங்களில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அகல்விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பூளவாடியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரான காந்திமதி கூறியதாவது; பரம்பரை, பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மண்பாண்ட தொழிலே செய்து வருகிறோம். நானே கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழில் ஈடுபட்டுள்ளேன். சீசனுக்கு ஏற்ற மாதிரி சுவாமி பொம்மைகள்; பொங்கல் பானைகள், அகல் விளக்குகள் என பல்வேறு மண்பாண்ட பொருட்களை செய்கிறோம். இத்தொழிலுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆட்கள் இருந்தால் மட்டுமே, பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட முடியும். முக்கிய மூலப்பொருளான மண் எடுப்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி குளத்தில் இருந்தும்; இங்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மண் எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் மண்ணை நன்கு வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர்த்த வேண்டும். அதன்பின்பு அதனை நன்கு தண்ணீரில் கரைத்து வடிகட்ட வேண்டும். இவ்வாறு வடிகட்டப்படும் மண் பிசையும் பதத்துக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் வரைக்கும் காலம்பிடிக்கும், மழைக்காலத்தில் ஐந்து நாட்கள் வரைக்கும் கூட ஆகும். அதனை மண் அரைக்கும் இயந்திரத்தை கொண்டு நன்கு பொருட்கள் செய்யும் பக்குவத்துக்கு அரைக்கப்பட்டு; பின்பே விளக்கு, பானைகள் செய்யப்படுகிறது.
ஒருலோடு மண்ணில் இருந்து ஒரு லட்சம் விளக்குகள் வரைக்கும் செய்ய முடியும். ஒரு நாள் குறைந்தபட்சம், 6 முதல் 8 மணிநேரம் வேலை செய்தால், 3 ஆயிரம் விளக்குகள் வரைக்கும் செய்ய முடியும். பெரிய விளக்குகள் என்றால் ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நிழலில் உலர்த்த பின்பு; ஒருநாள் வெயிலில் காய வைக்கப்படுகிறது. அதன்பின்பு சூலையில் வைத்து குறைந்தது, 2 மணி நேரம் வேக வைக்கப்படுகிறது. ஒருநாள் முழுவதும் சூடு இருப்பதால்; மறுநாளே சூலையில் இருந்து எடுக்கப்படும். அதன்பின்பு தரம் பிரிக்கப்பட்டு; வேகாத பொருட்களை மீண்டும் வேக வைப்போம். இதில், 10 முதல், 15 சதவீதம் வரைக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆயிரம் விளக்குகள், 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை ஆர்டர் கொடுத்ததன் பேரில் உற்பத்தி செய்து கொடுக்கிறோம். திருக்கார்த்திகை தீப விழாவுக்கு மிகச்சில நாட்களே இருப்பதால்; தேவை அதிகரிப்பதன் பேரில் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளோம். கோதவாடி குளத்து மண், 3 ஆயிரம் ரூபாயும், இங்குள்ள பகுதியில் குளத்தில், 2 ஆயிரம் ரூபாயும் ஒரு லோடு மண்ணுக்கு வசூலிக்கப்படுகிறது. கோதவாடி மண்ணே எந்தவிதமான பொருட்களும் கலக்காமல் மண்பாண்டங்கள் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. பணம் கொடுத்து மண் எடுத்தாலும்; பல சமயங்களில் கோதவாடி குளத்து மண் கிடைப்பதில்லை.
தற்போது ஆட்கள் பயன்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டுமானால், அதற்கான இயந்திரத்துக்கு, 2 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகும். ஆனால் அந்தளவுக்கு பணம் கொடுத்து இயந்திரம் வாங்க வழியில்லை. பல வங்கிகளில் கடன் கேட்டும் யாரும் எந்தவித உதவியும் செய்ய முன்வரவில்லை. மண் கிடைப்பதில் பிரச்னை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் மண்பாண்ட கலைஞர்களுக்கு, அரசு சார்பில் மானியங்கள், சலுகைகள் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றமடைய வழி காட்டவேண்டும். இவ்வாறு காந்திமதி தெரிவித்தார்.